உலகம்

இந்திய கோடீஸ்வரக் குடும்பம் மீது பரபரப்புக் குற்றச்சாட்டு: சுவிட்சர்லாந்தில் இன்று நீதிமன்ற விசாரணை

Published

on

இந்திய கோடீஸ்வரக் குடும்பம் ஒன்றின்மீது, சுவிட்சர்லாந்தில், ஆட்கடத்தல் மற்றும் துஷ்பிரயோகம் முதலான பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அந்த வழக்கை எதிர்கொள்வதற்காக அந்தக் குடும்பத்தினர் நீதிமன்றம் வர உள்ளார்கள்.

ஹிந்துஜா குழுமம், வாகனங்கள், எண்ணெய் மற்றும் ரசாயனங்கள், வங்கி மற்றும் நிதி, தகவல் தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, சுகாதாரம், வர்த்தகம், உள்கட்டமைப்பு திட்ட மேம்பாடு, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, மின்சாரம் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பதினொரு துறைகளில் கோலோச்சும் ஒரு கூட்டு நிறுவனமாகும். இந்தக் குழுமத்தின் உரிமையாளர்களான ஹிந்துஜா சகோதரர்களுக்கு உலகம் முழுவதும் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்கள் உள்ளன.

ஹிந்துஜா குடும்பத்தினரில் ஒருவருக்குச் சொந்தமான சொத்து ஒன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ளது. அங்கு வேலை செய்வதற்காக இந்தியர்கள் சிலர் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அவர்கள், தங்க இடம், நல்ல சம்பளம் என ஆசை காட்டி அழைத்துவரப்பட்ட நிலையில், ஒரு கட்டிடத்தின் அடித்தளத்தில் தங்க கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், மாதம் முழுவதும் தினமும் அதிகாலை முதல் இரவு வரை ஓய்வின்றி வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படதாகவும், வாரத்தில் ஒரு நாள் கூட ஓய்வு இல்லாமல், ஓவர்டைம் செய்தும் அதற்கான ஊதியம் கொடுக்கப்படாமல், சில நேரங்களில் தாங்கள் வேலை செய்ததற்கான மாதச் சம்பளம் கூட ஒழுங்காக கொடுக்கப்படவில்லை என்றும் அவர்களில் மூன்று பேர் புகாரளித்துள்ளார்கள்.

இந்த வழக்கை எதிர்கொள்வதற்காக ஹிந்துஜா குடும்பத்தினரில் நான்கு பேர், இன்று ஜெனீவா நீதிமன்றம் வருகிறார்கள்.

வழக்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, பல பொய்களின் அடிப்படையில் தங்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக அவர்கள் தரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version