உலகம்

ஏமன் தாக்குதல்… யார் இந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்? செங்கடலில் என்ன பிரச்சினை?

Published

on

பிரித்தானியாவும், அமெரிக்காவும் இணைந்து, ஏமன் நாட்டிலுள்ள பல இடங்கள் மீது வான்வெளித்தாக்குதல் நடத்திய விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏமன் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஈரான் ஆதரவு அமைப்புதான் இந்த ஹவுதி அமைப்பு. 1990களில் ஏமனில் உருவான இந்த அமைப்பின் அதிகாரப்பூர்வப் பெயர், Ansar Allah என்பதாகும். Zaidi ஷியாக்கள் பெரும்பான்மை கொண்ட இந்த அமைப்பின் தலைமைப் பதவி பொதுவாக, ஹவுதி என்னும் அரேபிய பழங்குடியினரால் வகிக்கப்படுவதால் அந்த அமைப்பினர் ஹவுதிகள் என அழைக்கப்படுகின்றனர்.

இந்த ஹவுதி அமைப்பினர் ஆளும் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு, 2014 முதல், ஏமன் தலைநகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இந்த அமைப்பைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள், தங்களை காசா ஆதரவாளர்கள் என கூறிக்கொள்கிறார்கள். ஆகவே, இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்துள்ளதால், செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல், மற்றும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் கப்பல்கள் மீது இந்த கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள்.

குறிப்பாக, சரக்குக் கப்பல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குறிவைப்பதால், தற்போது பிரித்தானியாவுக்கு வரவேண்டிய சரக்குக் கப்பல்கள் ஆப்பிரிக்காவை சுற்றி பயணிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இதனால், பொருட்கள் பிரித்தானியாவுக்கு வந்து சேர கூடுதலாக 10 நாட்கள் ஆகிறது. பொருட்கள் வருவது தாமதமாவதால், பிரித்தானிய பல்பொருள் அங்காடிகளில் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை செங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த சில கப்பல்களை நோக்கி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு தாக்க, அவற்றில் 18 ட்ரோன்களையும் இரண்டு ஏவுகணைகளையும் செங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள பிரித்தானிய மற்றும் அமெரிக்க போர்க்கப்பல்கள் தாக்கி அழித்தன.

அந்த தாக்குதலைத் தொடர்ந்து, ஹவுதி கிளர்ச்சியாளர்கள், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடுமையான ராணுவ பதிலடி கொடுக்கப்படும் என மிரட்டல் விடுத்தனர்.

அவர்கள் மிரட்டல் விடுத்த சில மணி நேரங்களில், நேற்று இரவு, ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தளமாக பயன்படுத்தும் பல இடங்கள் மீது பிரித்தானிய அமெரிக்கப் படைகள் குண்டுமழை பொழிந்தன.

பதிலடி கொடுப்போம் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சொல்லியதுமே, அதிரடியாக ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தளமாக பயன்படுத்தும் பல இடங்கள் மீது பிரித்தானிய அமெரிக்கப் படைகள் குண்டுமழை பொழிந்து பதில் நடவடிக்கையில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version