உலகம்
இனப்படுகொலை செய்வதாக குற்றச்சாட்டு: சர்வதேச கோர்ட்டில் இஸ்ரேல் மீது விசாரணை
பாலஸ்தீனத்தின் காசா முனைப் பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தாக்குதல் நடத்தி வருகிறது. மூன்று மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் இப்போரில் குழந்தைகள், பெண்கள் என அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகிறார்கள்.
காசா முழுவதிலும் இஸ்ரேலின் தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. போரில் பாலஸ்தீனியர்களை குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை இஸ்ரேல் மறுத்து வந்தது.
இதற்கிடையே காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக சர்வதேச கோர்ட்டில் தென்ஆப்பிரிக்கா வழக்கு தொடர்ந்தது.
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை இனப்படுகொலை என அறிவிக்கவும், உடனடி போர் நிறுத்தத்தை கோரியும் இந்த வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை இன்று கோர்ட்டில் தொடங்குகிறது. இதில் இஸ்ரேல் ஈடுபடுவது போர் இனப்படுகொலைகள் என தென் ஆப்பிரிக்கா வாதிடவுள்ளது. மேலும் போர் நடவடிக்கைகளுக்கு கோர்ட்டு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்காவின் கோரிக்கை குறித்தும் விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கில் வாதிட சட்டக்குழுவை இஸ்ரேல் அனுப்பி உள்ளது.
இவ்வழக்கில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும். இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ள நாடுகளும் தங்களது முடிவுகளை மாற்றிக் கொள்ளும் சூழல் ஏற்படும்.
இதற்கிடையே காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. காசா முழுவதும் இஸ்ரேல் ஏவுகணை, குண்டுகளை வீசிவருகிறது.