உலகம்
தங்க காலணியை தலையில் ஏந்தி நடைப்பயணம்: அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர் காணிக்கை
அயோத்தி ராமருக்கு காணிக்கையாக தங்க காலணிகளை சுமந்தபடி பக்தர் ஒருவர் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22ம் திகதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஹைதராபாத் நகரை சேர்ந்த சல்லா சீனிவாச சாஸ்திரி(64) என்ற தீவிர பக்தர் ஒருவர், நண்பர்கள் சிலரின் நன்கொடை உதவியுடன் ரூபாய் 65 லட்சம் மதிப்புள்ள ஐம்பொன்னால் செய்யப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட காலணியை தலையில் சுமந்து கொண்டு அயோத்திக்கு நடைப்பயணம் செய்து வருகிறார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டதை அடுத்து, தங்க காலணியை ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு 8 ஆயிரம் கி.மீ தூரத்திற்கு புனித நடைப்பயணமாக கொண்டு செல்ல சல்லா சீனவாச சாஸ்திரி திட்டமிட்டுள்ளார்.
அதன்படி கடந்த ஜூலை மாதம் 20ம் திகதி ராமேஸ்வரத்தில் பயணத்தை தொடங்கிய அவர், இடையில் அவசர வேலையாக லண்டன் செல்ல வேண்டி இருந்ததால் தனது புனித பயணத்தை ஒத்தி வைத்து இருந்தார்.
பின்னர் மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்த அவர், தற்போது உத்தரபிரதேச மாநிலம், சித்ரகூடம் என்னும் இடத்தில் உள்ளார்.
இன்னும் 10 நாட்களில் அயோத்திக்கு செல்ல திட்டமிட்டுள்ள சல்லா சீனிவாச சாஸ்திரி தங்க காலணியை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் வழங்குவேன் என தெரிவித்துள்ளார்.
சல்லா சீனிவாச சாஸ்திரி இதற்கு முன்னதாக ராமர் கோயில் கட்டுவதற்காக 5 வெள்ளி செங்கல்களை வழங்கியுள்ளார்.