உலகம்
அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச் சூடுகள்
அமெரிக்காவில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு தாக்குதலானது மனநலம் சார்ந்த சம்பவம் என அந்நாட்டின் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது எதிர்வினையை உருவாக்கும் எனவும் இப்பிரச்சினை அடிப்படையில் மனநலம் சம்பந்தப்பட்டது எனவும் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
மேலும் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்ததோடு, அதில் ஒருவர் பாடசாலை ஆசிரியர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய டைலன் பட்லர் (Dylan Butler) எனும் 17 வயது மாணவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு கொண்டு உயிரிழந்துள்ளார்.
சில வருடங்களாக அமெரிக்காவில் பாடசாலை வளாகங்களில் இது போன்று நடைபெறும் துப்பாக்கிச் சூடுகளும் அதன் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
கடந்த 2023ல், அமெரிக்காவில், பாடசாலை வளாகங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 82 என தரவுகள் தெரிவிக்கின்றன.
இவற்றில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் அடங்கிய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 37 என தெரிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில், அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட ஆதரவு தேடி வரும் விவேக் ராமசாமி, துப்பாக்கிச்சூடு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
”சமூகத்தில் உள்ள ஆழமான பிரச்சினைகளே இதற்கு காரணம். துப்பாக்கிகளின் எண்ணிக்கை அல்ல.
பிரச்சினையின் வேர் வரை சென்று அதை தீர்க்க முனையாமல் இருப்பது தவறான அணுகுமுறை. ஆனால், அதை புரிந்து கொள்ளாமல் உடனடியாக ஒரு சட்டமியற்றுவதும் நாங்களும் ஏதோ செய்து விட்டோம் என கூறுவதும் வெறும் உணர்ச்சிகரமான தீர்வு.
இன்றோ, நாளையோ “துப்பாக்கிகளை தடை செய்யுங்கள்” எனும் கூக்குரல் அதிகரிப்பதை பார்க்கத்தான் போவீர்கள்.
“காரணமின்றி செயல்படுதல்” எனும் நோய் நமது சமூகத்தின் இதயம் மற்றும் உயிரிலும் கலந்து விட்டது.” என விவேக் ராமசாமி கூறியுள்ளார்.