உலகம்

ஒரே ஆண்டில் புலம்பெயர்ந்தோர் வருகை இருமடங்காக அதிகரிப்பு… திணறும் ஐரோப்பிய நாடு

Published

on

பிரித்தானியாவில் பிரதமர் ரிஷி சுனக்கின் அதிரடி நடவடிக்கையால் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் வருகை 36 சதவிகிதம் சரிவடைந்த நிலையில், இன்னொரு ஐரோப்பிய நாட்டில் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய வம்சாவளி பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முன்னெடுத்த ருவாண்டா திட்டம் காரணமாக 2023ல் புலம்பெயர்ந்தோர் வருகை எண்ணிக்கை பெருமளவு சரிவு கண்டுள்ளது.

ஆனால் ஸ்பெயின் நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் 57,000 பேர்கள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022 காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது இருமடங்கு என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஸ்பெயின் அரசாங்கம் கடந்த ஆண்டு செனகல் மற்றும் மொரிட்டானியா போன்ற நாடுகளில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்புகளை தீவிரப்படுத்தியதுடன், புலம்பெயர் மக்களின் பயணத்தை கட்டுப்படுத்தவும் கோரியிருந்தது.

மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள இராணுவ முகாம்கள், ஹொட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் புலம்பெயர் மக்களுக்கு கூடுதல் அவசர விடுதிகளை உருவாக்க வேண்டியிருந்தது.

மொத்தம் 56,852 புலம்பெயர் மக்கள் 2023ல் நிலம் அல்லது கடல் வழியாக ஸ்பெயினுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தனர். 2018க்கு பின்னர் மிகப் பெரிய எண்ணிக்கை இதுவென்றே கூறப்படுகிறது.

மட்டுமின்றி, 2024ம் ஆண்டிலும் புலம்பெயர் மக்களின் வருகை தொடர்வதாகவே கூறப்படுகிறது. திங்களன்று மட்டும் 6 சிறு படகுகளில் மொத்தம் 287 சட்டவிரோத புலம்பெயர் மக்கள் ஸ்பெயின் நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version