உலகம்
5 மில்லியன் டொலர் பங்களாவில் இந்திய வம்சாவளி குடும்பம் மர்மமான முறையில் மரணம்: பொலிஸார் விசாரணை
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதி மற்றும் அவரது மகள் என 3 பேர்கள் அவர்களது வீட்டில் உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதியினரும், இளம் வயது மகளும் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள மாளிகையில் வியாழக்கிழமை உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் கணவர் ராகேஷ் கமல்(57) மனைவி டீனா(54) மற்றும் அவர்களது மகள் அரியானா(18) ஆகிய 3 பேரும் உயிரிழந்த நிலையில் அவர்களது மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்டதாக நோர்போக் மாவட்ட வழக்கறிஞர் மைக்கேல் மோரிஸ்ஸில் தெரிவித்துள்ளார்.
டீனா மற்றும் அவர்களது கணவர் ராகேஷ் கமல் இருவரும் முன்னதாக EduNova என்ற கல்வி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர்.
இந்த சம்பவம் குடும்ப வன்முறை காரணமாக நடந்து இருக்கலாம் என்றும், கணவரின் உடலுக்கு அருகில் துப்பாக்கி ஒன்று இருந்ததாகவும் மாவட்ட வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மூவரும் யாராலும் கொல்லப்பட்டனரா அல்லது தற்கொலையா என வழக்கறிஞர் தெரிவிக்கவில்லை.
அதே சமயம் சம்பவத்தின் மூல காரணத்தை ஊகிக்க மாவட்ட வழக்கறிஞர் மறுத்துவிட்டார், அதற்கு முன்னதாக அவர்களது மருத்துவ பரிசோதனை முடிவுகள் வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.