உலகம்
பிரித்தானியாவில் புத்தாண்டு முதல் அமுலுக்கு வரும் 11 புதிய சட்டங்கள்
வெளியான கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில், பிரதமர் ரிஷி சுனக்கின் ஆட்சி முடிவுக்கு வரலாம் என கூறப்படும் நிலையில், பிறக்கவிருக்கும் புத்தாண்டு முதல் புதிய சட்டங்களை அமுலுக்கு கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிஷி சுனக்கின் அரசாங்கம் அமுலுக்கு கொண்டுவர இருக்கும் பல புதிய சட்டங்கள் வரவிருக்கும் ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கையை கணிசமாக பாதிக்கும் என்றே கூறப்படுகிறது.
பிரதானமாக புகைப்பிடிக்கும் விதிகளில் கணிசமான மாற்றம் கொண்டுவரப்படும் என்றே தெரியவந்துள்ளது. இதனால் மில்லியன் கணக்கான இளைஞர்கள் ஒருபோதும் சட்டப்பூர்வமாக சிகரெட் வாங்க முடியாது என்றே கூறப்படுகிறது.
மேலும், குறைந்தபட்ச ஊதியத்தில் உயர்வு மற்றும் ஊழியர்களுக்கு வாடிக்கையாளர்களால் அளிக்கப்படும் டிப்ஸ் தொகை இனி ஊழியர்களுக்கே என்ற சட்ட திருத்தமும் அமுலுக்கு வர இருக்கிறது.
புகைப்பிடிக்கும் வயது வரம்பானது இனி ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும். இந்த விதியானது பிறக்கும் புத்தாண்டு முதல் அமுலுக்கு கொண்டுவரப்படும் என்று ரிஷி சுனக் அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.
இதனால் 14 வயது நிரம்பிய ஒருவர் இனி ஒருபோதும் சிகரெட் வாங்க அனுமதிக்கப்படமாட்டார்கள். தற்போது 16 வயது நிரம்பிய எவரும் சிகரெட் வாங்கலாம். அமுலுக்கு வரவிருக்கும் புதிய சட்டத்தால் 2040ம் ஆண்டுக்குள் இளையோர்களை புகைப்பிடிப்பதில் இருந்து கண்டிப்பாக மீட்க முடியும் என ரிஷி சுனக் அரசாங்கம் நம்புகிறது.
எதிர்வரும் ஏப்ரல் 1 முதல் 21 வயது நிரம்பிய ஊழியர்களுக்கு மணிக்கு 11.44 பவுண்டுகள் ஊதியமாக அளிக்கப்பட வேண்டும். முதன்முறையாக பிரித்தானியாவில் 21 மற்றும் 22 வயதுடையோருக்கு தேசிய அளவிலான ஊதியமளிக்க ரிஷி சுனக் அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
மேலும், புத்தாண்டு முதல் XL bully நாய்களுக்கு தடை உறுதி என தெரிய வந்துள்ளது. டிசம்பர் 31 முதல் XL bully நாய்களை இனப்பெருக்கம் செய்விப்பது, விற்பனை, விளம்பரம், பரிமாற்றம், பரிசாக அளிப்பது, கைவிடுதல் அல்லது பிரித்தானியா மற்றும் வேல்ஸில் தெருக்களில் விட்டுவிடுவது உள்ளிட்டவை சட்டத்திற்கு எதிரானதாகும்.
மேலும், தொழில்முறை ஊழியர்கள் 29,000 பவுண்டுகள் அல்லது அதற்கு மேலும் ஆண்டு ஊதியமாக ஈட்டினால் மட்டுமே இனி விசா அனுமதி என்ற சட்டமும் புத்தாண்டில் அமுலுக்கு வர உள்ளது.
கார் உற்பத்தியாளர்களுக்கான புதிய குறைந்தபட்ச இலக்குகள் 2024ல் நடைமுறைக்கு வரும் என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி விற்கப்படும் வாகனங்களில் 22 சதவிகித பூஜ்ஜிய உமிழ்வு கொண்டவையாக இருக்க வேண்டும். 2035ல் இந்த எண்ணிக்கை 100 சதவிகிதமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.