உலகம்

பிரான்ஸில் கிறிஸ்துமஸ் விருந்து சாப்பிட்ட 700 பேருக்கு கடுமையான வயிற்றுவலி

Published

on

பிரான்ஸில் கிறிஸ்துமஸ் விருந்து சாப்பிட்ட 700 பேருக்கு கடுமையான வயிற்றுவலி

பிரான்சில் உள்ள ஏர்பஸ் (Airbus) நிறுவனம் அளித்த கிறிஸ்துமஸ் விருந்தில் சாப்பிட்ட 700 பேருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பாவை மையமாக கொண்டு செயல்படும் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனம் ஏர்பஸ் (Airbus). இந்த நிறுவனம், பயணிகள் போக்குவரத்து, ராணுவம் மற்றும் விண்வெளி பயன்பாட்டிற்கு விமானங்களை தயாரிக்கிறது. குறிப்பாக, ஏர்பஸ் நிறுவனம் உலகிலேயே முன்னணி ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்திற்கு பிரான்ஸ் நாட்டில் கிளை உள்ளது. அங்குள்ள நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்தளிக்க ஏர்பஸ் அட்லான்டிக் முடிவு செய்தனர். அதன்படி, சுமார் 2600 ஊழியர்கள் விருந்தில் பங்கேற்றனர்.

இந்த கிறிஸ்துமஸ் விருந்தானது, மேற்கு பிரான்ஸ் பகுதியில் லொய்ர்-அட்லான்டிக் (Loire-Atlantique) பிராந்தியத்தில் மாண்டார்-டி-ப்ரெடான் (Montoir-de-Bretagne) பகுதியில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்தின் சொந்த உணவகத்தில் வழங்கப்பட்டது.

இந்த விருந்தில் பல்வேறு உயர்தர அசைவ உணவுகள் மற்றும் ஐஸ்கிரீம் வகைகளும் வழங்கப்பட்ட 24 மணி நேரத்தில் 700 ஊழியர்களுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அதனுடன் சேர்த்து தலைவலி, வாந்தி, வயிற்று போக்கு உள்ளிட்ட பிரச்சனைகளும் ஏற்பட்டன. இந்த விருந்தில் பாதிப்படைந்த ஊழியர்களுக்கு குடல் அழற்சி நோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இச்சம்பவம் குறித்து பிரான்ஸ் நாட்டின் சுகாதாரத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி, அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து ஏர்பஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “நாங்கள் விருந்து வழங்கிய அனைத்து உணவு மாதிரியையும் வைத்துள்ளோம். சுகாதார துறையுடன் விசாரணைக்கு ஒத்துழைக்கிறோம்” என்றார்.

Exit mobile version