உலகம்

வெளிநாட்டவர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி: உள்துறை அலுவலகம் அடித்தது அந்தர் பல்டி

Published

on

வெளிநாட்டவர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி: உள்துறை அலுவலகம் அடித்தது அந்தர் பல்டி

பிரித்தானியா அறிமுகம் செய்யவிருக்கும் புதிய புலம்பெயர்தல் விதிகள் வெளிநாட்டவர்கள் பலருக்கு அச்சத்தையும் சந்தேகத்தையும் உருவாக்கிய நிலையில், தற்போது அந்த விடயம் தொடர்பாக உள்துறை அலுவலகம் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது.

பிரித்தானியா புதிய புலம்பெயர்தல் விதிகள் சிலவற்றை அறிமுகம் செய்ய உள்ள நிலையில், அவற்றில் ஒன்று, ஆண்டொன்றிற்கு 38,700 பவுண்டுகள் வருவாய் உள்ளவர்கள் மட்டுமே, பிரித்தானியர்கள் அல்லாத தங்கள் குடும்பத்தினரை, அதாவது, கணவன் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகளைக் கூட, தங்களுடன் பிரித்தானியாவில் வைத்துக்கொள்ளமுடியும் என்று கூறியது.

பிரித்தானியர்களல்லாத தங்கள் குடும்பத்தினருடன் பிரித்தானியாவில் வாழ்பவர்கள், இந்த செய்தி தங்களுக்கு கடும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், பிரித்தானியரல்லாத தங்கள் குடும்பத்தினரை அவர்களுடைய நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடவேண்டுமா என்னும் கேள்வியும் எழுந்தது.

அதாவது, பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளதாக கூறி, புலம்பெயர்தலைக் கடுப்படுத்துவதற்காகவே உள்துறைச் செயலர் இந்த விதிகளை அறிமுகம் செய்ய இருந்தார்.

குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், வெளிநாட்டு மாணவர்களும், முதியவர்களைக் கவனித்துக்கொள்ளும் பணியாளர்களும், தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்து வருவதைத் தடுப்பதற்காக, அவர்களைக் குறிவைத்தே இந்த விதியைக் கொண்டு வர திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.

அதாவது, முன்னர் அறிவிக்கப்பட்டது போல, ஆண்டொன்றிற்கு 38,700 பவுண்டுகள் வருவாய் உள்ளவர்கள் மட்டுமே, பிரித்தானியர்கள் அல்லாத தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் பிரித்தானியாவில் வைத்துக்கொள்ளமுடியும் என்னும் விதியில், 38,700 பவுண்டுகள் என்னும் தொகை, ஆண்டுக்கு 29,000 பவுண்டுகள் என மாற்றப்பட்டுள்ளது.

உள்துறை அலுவலக அமைச்சரான Lord Sharpe of Epsom, இப்போதைக்கு, ஆண்டுக்கு 29,000 பவுண்டுகள் வருவாய் உள்ள பிரித்தானியர்கள், பிரித்தானியர்களல்லாத தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் பிரித்தானியாவில் வைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

என்றாலும், இது இப்போதைக்குத்தான் என்றும், பின்னர் இந்த தொகை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், எப்போது அந்த மாற்றங்கள்செய்யப்படும் என்பது குறித்து சரியான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாததால், மாற்றி மாற்றி அறிவிப்புகளை வெளியிடும் உள்துறை அலுவலகம், குழப்பம் உண்டாக்கிக்கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Exit mobile version