உலகம்

அகதிகளாக நுழைவோரை தடுக்க கடுமையான சட்டம்

Published

on

அகதிகளாக நுழைவோரை தடுக்க கடுமையான சட்டம்

தமது நாட்டிற்குள் சட்டவிரோத அகதிகளாக நுழைவோரை தடுக்க கடுமையான மாற்றங்களை கொண்டு வரும் வகையில் புதிய சட்டமூலமொன்றை பிரான்ஸ் உறுவாக்கியுள்ளது.

இந்த சட்டமூலத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான், அந்நாட்டின் ரெனய்ஸான்ஸ் கட்சி (Renaissance party) மற்றும் எதிர்கட்சி தலைவரும் தீவிர வலதுசாரி சிந்தனையாளருமான மரின் லெ பென் (Marine Le Pen) சார்ந்த நேஷனல் ரேலி (National Rally) ஆகிய இரு கட்சிகளுமே ஒருமித்து ஏற்றுக்கொண்டுள்ளன.

பல ஆண்டுகளாக அல்ஜீரியா, மொராக்கோ, போர்த்துகல், துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்குள் சட்டவிரோத அகதிகளாக தரைவழியாகவும், கடல் வழியாகவும் நீண்ட தூர ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு மக்கள் உள்ளே நுழைவது தொடர்கதையாகி வருகிறது.

சமீப சில வருடங்களாக பிரான்ஸில் இவ்வாறு உள்ளே நுழையும் அகதிகளால் பல்வேறு உள்நாட்டு சிக்கல்கள் எழுந்துள்ளதாக பிரான்ஸ் தரப்பில் முறைப்பாடுகள் வெளிவந்தன.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டிற்கு வரும் அகதிகள் குறித்த புலம் பெயர்வோர் சட்டத்தில் கடுமையான மாற்றங்களை கொண்டு வரும் வகையில் சட்டமூலத்தை பிரான்ஸ் வெற்றிகரமாக தாக்கல் செய்துள்ளது.

மேக்ரானின் கட்சிக்குள் சட்டமூலத்திற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இது குறித்து உரையாற்றிய மேக்ரான், “நாட்டில் புலம் பெயர்பவர்களால் பிரச்சினை இருப்பது உண்மைதான். இதனால் உள்நாட்டில் அமைதியின்மை தோன்ற கூடிய நிலை இருந்தது.

அதனை தடுக்க வேண்டியது அரசின் கடமை. வெள்ளம் போல் உள்ளே நுழையும் அகதிகளை தடுக்கும் கவசமாக இந்த சட்டம் அமையும்” என தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் அகதிகளுக்கு உறுப்பினர் நாடுகளின் எல்லைக்கருகே மையம் அமைக்கவும், நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படும் அகதிகளை உடனுக்குடன் அவரவர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பவும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகள் ஒரு ஒப்பந்தத்தை சில தினங்களுக்கு முன் உருவாக்கியது.

2027ல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அகதிகள் பிரச்சினை வாக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாக இருக்கும் என மேக்ரான் கருதுவதால் தன் நாட்டு மக்களை ஈர்க்கும் வகையில் விரைவாக இந்த சட்டத்தை கொண்டு வர முயல்கிறார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version