உலகம்
மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்த 87 பேரின் உடல்கள் அடக்கம்
மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்த 87 பேரின் உடல்கள் அடக்கம்
The bodies of 87 people who died in the Manipur riots were buried
மணிப்பூர் இனக்கலவரத்தில் கொல்லப்பட்ட குக்கி சமூகத்தை சேர்ந்த 87 பேரின் உடல்கள் மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டது.
இந்திய மாநிலமான மணிப்பூரில் கடந்த 7 மாதங்களாக நடந்த இனக்கலவரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு, மெய்தி சமூக மக்களுக்கும் பழங்குடி குக்கி சமூக மக்களுக்கும் இடையே நடந்த இனக்கலவரம் பலராலும் பேசப்பட்டு மோசமான நிகழ்வாக பார்க்கப்பட்டது.
இந்த கலவரத்தில் இதுவரை மொத்தம் 180 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பிற இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
மெய்தி சமூக மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரியதால் எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் பழங்குடியினர் பேரணி நடத்தினர். இதனால் வன்முறை உருவாகி இனக்கலவரமாக மாறியது.
தற்போது, மணிப்பூர் மாநிலத்தில் இயல்புநிலை திரும்பி விட்டதாக மாநில அரசு தெரிவித்தாலும், தினம்தோறும் வன்முறை நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில், நேற்று குக்கி சமூகத்தை சேர்ந்த உயிரிழந்த 87 பேரின் உடல்கள் சுராசந்த்பூர் மாவட்டத்தில் நேற்று மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டது. செக்கன் பகுதியில் குக்கி தியாகிகள் கல்லறை என பெயரிடப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன.
கல்லறையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். அடக்கம் செய்யப்படும் போது இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர் விடுவது நெஞ்சை உலுக்கும் விதமாக இருந்தது. கிராம பாதுகாப்பு தன்னார்வலர்கள் இறந்தவர்களின் உடலுக்கு துப்பாக்கியால் சுட்டு மரியாதை செலுத்தினர்.