உலகம்

ரயில் தண்டவாளத்தை அடித்துச் சென்ற வெள்ளம்.., எச்சரித்து 800 பயணிகள் உயிரை காப்பாற்றிய நபர்

Published

on

ரயில் தண்டவாளத்தை அடித்துச் சென்ற வெள்ளம்.., எச்சரித்து 800 பயணிகள் உயிரை காப்பாற்றிய நபர்

தென்தமிழகத்தில் பெய்யும் கனமழையால் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட விரைவு ரயிலானது ஊழியர் கொடுத்த முன்னறிவிப்பால் முன்கூட்டியே நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் 95 சென்டிமீட்டர் மழையும், திருச்செந்தூரில் 70 சென்டிமீட்டர் மழையும், சாத்தான்குளத்தில் 60 சென்டிமீட்டர் மழையும் பெய்து தீவு போல மாறியுள்ளது.

இந்நிலையில், கனமழையின் காரணமாக கடந்த 17 -ம் திகதி திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது.

இதனால் ரயிலுக்குள் இருந்த 800 பயணிகள் சிக்கினர். அவர்கள், உணவு, தண்ணீரின்றி கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களை மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நாசரேத்- ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலைங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தது. ஆனால், அப்போது தண்டவாளம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. அந்த நேரத்தில், ரயில்வே ஊழியர் உடனடியாக திருச்செந்தூரில் ரயில் ஓட்டுநருக்கு சிக்னல் கொடுத்தார்.

அவர், தன்னிடம் இருந்த சிவப்பு சிக்னல் விளக்கை நீண்ட நேரம் உயர்த்தி காட்டியபடியே எச்சரிக்கை விடுத்தார். இதனால், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்துக்கு முன்பே ரயிலை ஓட்டுநர் நிறுத்தினார்.

இதன் காரணமாக ரயிலில் இருந்த 800 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Exit mobile version