உலகம்
புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை எதிரொலி: மிதவைப்படகு திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு
புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை எதிரொலி: மிதவைப்படகு திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு
மிதவைப்படகில் தங்கவைக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த படகுத் திட்டத்தை உடனடியாகக் கைவிட 60க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் அரசை வலியுறுத்தியுள்ளன.
புகலிடக்கோரிக்கையாளர்களை ஹொட்டல்களில் தங்கவைப்பதால் ஆகும் செலவைக் குறைப்பதற்காக, அவர்களை மிதவைப்படகுகளில் தங்கவைக்க பிரித்தானிய அரசு முடிவு செய்தது.
பல்வேறு தரப்பிலிருந்தும் இந்த மிதவைப்படகுத் திட்டத்துக்கு எதிர்ப்பு வந்தும், Bibby Stockholm என்ற பெயர் கொண்ட மிதவைப்படகில் புகலிடக்கோரிக்கையாளர்கள் சிலர் தங்கவைக்கப்பட்டார்கள்.
படகில் லைஃப் ஜாக்கெட்கள் இல்லையென்றும், தண்ணீரில் நிற்கும்போது படகில் தீப்பற்றினால் எப்படி தீயை அணைப்பது என்பதுபோன்ற பிரச்சினைகள் உள்ளதாகவும் கூறப்பட்டது.
பின்னர், படகில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் லீஜியோனெல்லா என்னும் நோய்க்கிருமிகள் இருப்பது தெரியவந்ததால், படகிலிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு, இரண்டு மாதங்களுக்குப் பின் அக்டோபரில் மீண்டும் படகுகளில் ஏற்றப்பட்டார்கள்.
புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் பலி
இந்நிலையில், அந்த மிதவைப்படகில் தங்கவைக்கப்பட்டிருந்த புகலிடக்கோரிக்கையாளர்களில் ஒருவர் பலியாகிவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
Dorset என்னுமிடத்திலுள்ள Portland துறைமுகத்தில் அந்த படகு நிறுத்தப்பட்டுள்ளது. அந்த படகில் தங்கியிருந்த புகலிடக்கோரிக்கையாளர்களில் ஒருவர் செவ்வாயன்று தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிதவைப்படகு திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு
மிதவைப்படகில் தங்கவைக்கப்பட்டிருந்த புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து, 65 தொண்டுநிறுவனங்களும் லேபர் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும், உடனடியாக அந்த திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரக்கோரி அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்கள்.
மோசமான உணவு, உணவு வாங்க கடைசியில் நிற்பவர்களுக்கு உணவுப் பற்றாக்குறை என ஏற்கனவே மிதவைப்படகில் பல பிரச்சினைகள் உள்ள நிலையில், புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்த பிறகு நிலைமை மோசமாகிவிட்டதாக தெரிவிக்கும் ஒருவர், சிகரெட் வாங்க வெளியில் வரவேண்டும் என்றால் கூட, விமான நிலையத்தில் சோதனையிடுவது போல கடும் சோதனைக்கு பிறகே படகிலிருந்து வெளியே வரமுடியும் என்று கூறியுள்ளார்.