உலகம்

உக்ரைனுக்கு எதிராக போர்க்களத்தில் ஆசிய நாடொன்றின் இளைஞர்கள்: அம்பலமான பின்னணி

Published

on

உக்ரைனுக்கு எதிராக போர்க்களத்தில் ஆசிய நாடொன்றின் இளைஞர்கள்: அம்பலமான பின்னணி

ரஷ்ய ராணுவத்திற்காக இளைஞர்களை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட 12 பேர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதிர்ச்சி பின்னணி அம்பலமாகியுள்ளது.

பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள நேபாளத்தில் இருந்து இளைஞர்கள் பலர் சம்பளத்திற்காக ரஷ்ய ராணுவத்தில் இணைந்து உக்ரைனில் போரிட்டு வருகின்றனர்.

இந்த வார தொடக்கத்தில், உக்ரைனில் 6 பேர் இறந்ததை அடுத்து, நேபாள கூலிப்படையினரை திருப்பி அனுப்புமாறு நேபாளம் ரஷ்யாவிடம் கேட்டுக் கொண்டது.

இந்த நிலையில், சுற்றுலா விசாவில் சுமார் 9,000 டொலர்கள் கூலியாக பெற்றுக்கொண்டு நேபாள இளைஞர்களை ரஷ்ய ராணுவத்தில் பணிக்கு அமர்த்தியுள்ளதாக கைதான் ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடும் சிலர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

உக்ரைனுக்கு எதிராக எத்தனை நேபாள இளைஞர்கள் போரிட்டு வருகின்றனர் என்ற தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிறது. ரஷ்யாவுக்கான நேபாள தூதர் தெரிவிக்கையில், சுமார் 150-200 நேபாள பிரஜைகள் ரஷ்யாவுக்காக போராடி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், சட்டவிரோதமாக பணம் மற்றும் விசா வதிவிட காரணங்களுக்காக ஒவ்வொரு வாரமும் ஏராளமானோர் பதிவு செய்கிறார்கள் என்றே உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டுமின்றி, போரில் பலர் காயமடைந்து ரஷ்ய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்று நேபாளம். உலக வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் படி சுமார் 40 சதவீத நேபாள மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர்.

இந்த நிலையை சாதகமாக பயன்படுத்தும் ரஷ்ய நிர்வாகம், உக்ரைன் போருக்கு என ஜார்ஜியா, சிரியா மற்றும் லிபியா நாடுகளில் இருந்து கூலிப்படையினரை களமிறக்கியது போன்று நேபாள இளைஞர்களையும் ஈர்த்துள்ளது.

ஆனால், ரஷ்ய நிர்வாகம் நேரடியாக இதில் ஈடுபட்டுள்ளதாக தரவுகள் இல்லை என்றே நேபாள பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேபாள இளைஞர்களை கூலிப்படையாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என அந்த நாடு ரஷ்யாவுக்கு உத்தியோகப்பூர்வமாக கோரிக்கை வைத்துள்ளது.

மட்டுமின்றி, சமீபத்திய சண்டையில் கொல்லப்பட்ட ஆறு கூலிப்படையினரின் உடல்களை நேபாளத்திற்கு திருப்பி அனுப்புமாறு அந்த நாடு திங்களன்று கேட்டுக் கொண்டது. இருப்பினும், ரஷ்ய தரப்பில் இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

வெளியான தரவுகளின் அடிப்படையில், பல எண்ணிக்கையிலான நேபாள இளைஞர்கள் மாணவர் அல்லது வேலை விசாவில் ரஷ்யாவிற்குச் சென்று, பின்னர் ரஷ்ய இராணுவத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்கின்றனர் என்றே தெரியவந்துள்ளது.

இதனிடையே நேபாளத்தின் பொருளாதார நிலை அனைவரும் அறிந்தது தான், அந்த நாட்டுக்கு திரும்பி என்ன செய்யப் போகிறோம் என உக்ரைனில் போரிடும் நேபாள கூலிப்படை இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version