உலகம்

இந்தியாவுடனான மோதலால் தங்களுக்கு இழப்பு என்று தெரிந்தும் பிடிவாதம் பிடிக்கும் கனடா

Published

on

இந்தியாவுடனான மோதலால் தங்களுக்கு இழப்பு என்று தெரிந்தும் பிடிவாதம் பிடிக்கும் கனடா

இந்தியாவுடனான மோதலால், வர்த்தக ரீதியில் இழப்பு கனடாவுக்குத்தான், இந்தியாவுக்கு அல்ல என்று கனடா முன்னாள் பிரீமியர் ஒருவர் வெளிப்படையாக கூறியுள்ள நிலையிலும், முதலில் விசாரணை, பிறகுதான் வர்த்தகம் என இந்தியா விவகாரத்தில் கனடா பிடிவாதம் பிடித்து வருகிறது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் முன்னாள் பிரீமியரான Christy Clark என்பவர், இந்தியாவுடனான மோதலால் கனடாவுக்குத்தான் இழப்பு என்று கூறியுள்ளார். இந்தியாவுக்கும் கனடாவுக்குமிடையில் வர்த்தக ஒப்பந்தம் ஒன்று குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், இந்தியாவுடனான மோதலால் அந்த ஒப்பந்தம் தாமதமாகிவருகிறது. அப்படி சரியான நேரத்தில் இரு நாடுகளுக்குமிடையில் அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லையானால், அதனால் இழப்பு இந்தியாவுக்கு அல்ல, கனடாவுக்குத்தான் என்று கூறியுள்ளார் Christy Clark.

கனடா உற்பத்தி செய்யும் பொருட்கள் மிக உயர்ந்த மதிப்பும் தரமும் கொண்டவை என்பது உண்மைதான். ஆனால், இந்தியா கனடாவை விட்டுவிட்டு வேறொரு நாட்டிடமிருந்து பொருட்களைப் பெறமுடியும். ஆக, பாதிப்பு, கனேடிய பணியாளர்களுக்கும், கனேடிய பொருளாதாரத்துக்கும்தான். நம் தரப்பினர் கனடாவின் வளத்தை அதிகரிக்க முயலும் நிலையில், இருநாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவு பாதிக்கப்படுவதால் நம் நாட்டுக்குத்தான் இழப்பு என்று கூறியுள்ளார் Christy Clark.

ஆனாலும், முதலில் விசாரணை, பிறகுதான் வர்த்தகம் என இந்தியா விவகாரத்தில் கனடா அடம் பிடித்து வருகிறது. ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய கனடாவின் ஏற்றுமதி, சர்வதேச வர்த்தகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சரான Mary Ng, இப்போது கனடாவின் குறி, விசாரணை நடப்பதன் மீதுதான் என்று கூறினார்.

ஊடகவியலாளர்கள் மீண்டும், இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடருமா என கேள்வி எழுப்ப, நான் சொல்லியதை நீங்கள் கேட்கவில்லையா, கனேடியர் ஒருவர் கனடா மண்ணில் கொல்லப்பட்டுள்ளார், அது தொடர்பான விசாரணை நடப்பது எவ்வளவு முக்கியம் என்பது குறித்து அரசு பேசி வருகிறது. அதை நடக்கவிடுவோம் என்றார் Mary Ng.

கனடா மண்ணில் கொல்லப்பட்டதாக அமைச்சர் கூறும் கனேடியர் ஒன்றும் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தியாகி அல்ல. அவர் தீவிரவாதி என குற்றம் சாட்டப்பட்டு இந்தியாவால் தேடப்பட்டு வந்த ஒரு குற்றவாளி!

ஆக, இந்தியாவால் கோடிக்கணக்கில் வருமானம் கிடைப்பதை நன்கு அறிந்தும், இந்தியாவுடன் மோதுவதால் வர்த்தக இழப்பு நேரிடும் என்று தெரிந்தும் ஏன், யாருக்காக கனடா வறட்டுப் பிடிவாதம் பிடிக்கிறது என்பதை காலம்தான் வெளிப்படுத்தவேண்டும்.

Exit mobile version