உலகம்
ஹமாஸ் செய்த தவறுக்கு பாலஸ்தீன மக்களை பழி வாங்குவதா? கவலை தெரிவிக்கும் பிரான்ஸ்
ஹமாஸ் செய்த தவறுக்கு பாலஸ்தீன மக்களை பழி வாங்குவதா? கவலை தெரிவிக்கும் பிரான்ஸ்
இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய அட்டூழியங்களுக்கு பாலஸ்தீன மக்களை பழிவாங்கக் கூடாது என்று பிரான்ஸ் வெளிப்படையாக கூறியுள்ளது.
காஸாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் இஸ்ரேலின் நடவடிக்கை கவலையளிப்பதாகவும் பிரான்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
பாலஸ்தீன மக்கள் பழிவாங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சரகம், ஹமாஸ் படைகள் செய்த தவறுக்கு பாலஸ்தீன மக்கள் கடந்த ஒரு மாத காலமாக பெரும் விலகி கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அல்-ஷிஃபா மருத்துவமனையை முற்றுகையிட்டிருந்த இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை டாங்கிகளுடன் மருத்துவமனைக்குள் அத்துமீறியது. ஹமாஸ் படைகளுக்கு எதிரான நடவடிக்கை இதுவென இஸ்ரேல் குறிப்பிட்டாலும், உள்ளே ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பிற பொதுமக்கள் சிக்கியுள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அல்-ஷிஃபா மருத்துவமனையில் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பிரான்ஸ் தனது தீவிர கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும், மருத்துவமனை உள்ளிட்ட உள்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்யும் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு இணங்க இஸ்ரேல் முன்வர வேண்டும் எனவும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சரகம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த வாரம், ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் காசாவில் பொதுமக்கள் மீது குண்டுவீச்சை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.