உலகம்

பிரித்தானிய அமைச்சரவை மாற்றியமைப்பு: யார் உள்ளே, யார் வெளியே…

Published

on

பிரித்தானிய அமைச்சரவை மாற்றியமைப்பு: யார் உள்ளே, யார் வெளியே…

பிரித்தானிய அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார் பிரதமர் ரிஷி சுனக். சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி, ஆளுங்கட்சிக்கு தொல்லை கொடுத்துக்கொண்டேயிருந்த சுவெல்லா பிரேவர்மேன் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சராக மீண்டும் கேபினட்டுக்குத் திரும்பியுள்ளார்.

பிரித்தானிய அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் யார், புதிதாக பதவியேற்றுள்ளவர்கள் யார் யார் என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.

பிரித்தானிய உள்துறைச் செயலராக பதவி வகித்துவந்த சுவெல்லா பிரேவர்மேன் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார், அவருக்கு பதிலாக, வெளியுறவுத்துறைச் செயலராக பதவி வகித்துவந்த ஜேம்ஸ் கிளெவர்லி, உள்துறைச் செயலராக பதவியேற்கிறார்.

ஜேம்ஸ் கிளெவர்லி வகித்துவந்த வெளியுறவுத்துறைச் செயலர் பதவி, முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூனுக்கு வழங்கப்பட்டுள்ளது. டேவிட் கேமரூன், பிரதமராக இருந்து மீண்டும் கேபினட்டுக்கு ஒரு அமைச்சராக திரும்பிய முதல் நபர் அல்ல, 15ஆவது நபர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். அதாவது, இதற்கு முன்பும், இதேபோல 14 முன்னாள் பிரதமர்கள் மீண்டும் கேபினட்டுக்கு அமைச்சராக திரும்பியுள்ளார்கள்!

சுகாதாரத்துறைச் செயலராக பதவி வகித்துவந்த ஸ்டீவ் பார்க்ளேக்கு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்கள் துறை என்னும் Defraவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறைச் செயலராக பதவி வகித்துவந்த ஸ்டீவ் பார்க்ளேக்கு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்கள் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதால், அவர் வகித்துவந்த சுகாதாரத்துறை விக்டோரியா அட்கின்ஸ் என்பவருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் துறைச் செயலராக பதவி வகித்துவந்த தெரேஸ் காஃபே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
போக்குவரத்துத்துறை அமைச்சரான ஜெஸ் நார்மனும் ராஜினாமா செய்துள்ளார்.

கேபினட்டிலிருந்து பதவிநீக்கம் செய்யப்பட்டது, உள்துறைச் செயலர் சுவெல்லா பிரேவர்மேன் மட்டுமல்ல, வீட்டுவசதித்துறை அமைச்சரான ரேச்சல் மெக்லீனும் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் வகித்துவந்த பொறுப்பு, தற்போது லீ ரௌலி என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கட்சித் தலைமைப் பொறுப்பை வகித்துவந்த கிரெக் ஹேண்ட்ஸ் என்பவருக்கு பதிலாக ரிச்சர்ட் ஹோல்ட்மேன் என்பவர் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மொத்தத்தில், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், அடுத்த பொதுத்தேர்தலுக்கான ஆயத்தங்களை துவக்கிவிட்டாற்போல் தோன்றுகிறது.

Exit mobile version