உலகம்
இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பில் ஐ.நா கவலை
இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பில் ஐ.நா கவலை\
காசாவிலுள்ள 35ற்கும் அதிகமான வைத்தியசாலைகளில் அரைவாசி செயலிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.
மோதல்களுக்குள் சிக்கியுள்ள வைத்தியசாலைகளில் உள்ள ஊழியர்கள் மற்றும் நோயாளர்களின் பாதுகாப்பு குறித்து பாரிய கரிசனையை வெளியிட்டுள்ளது.
காசா நகரில் உள்ள தமது வைத்தியசாலையின் இதயப் பிரிவு இஸ்ரேலின் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளதாக அல்-ஷிஃபா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
போதிய மின்சாரம் மற்றும் எரிபொருள் இல்லாத காரணத்தினால் அல் குத்ஸ் மருத்துவமனையும் செயலிழந்துள்ளதாக பாலஸ்தீன செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அல்-ஷிஃபா வைத்தியசாலையில் உள்ள குழந்தைகளை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு இணங்கியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் அல்-ஷிஃபா வைத்தியசாலையில் இருந்து தெற்கு நோக்கி இடம்பெயர்வதற்கான பாதுகாப்பு வழித்தடத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவத்தின் அரபு பேச்சாளர் கூறியுள்ளார்.
குறித்த வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவில் புதிததாக பிறந்த 20 குழந்தைகள் இருக்கும் நிழற்படம் சர்வதேச ஊடகமொன்றுக்கு அனுப்பட்டுள்ளது.
ஏற்கனவே மின்சாரம் இன்றிய காரணத்தினால் உரிய காலத்திற்கு முன்னதாக பிறந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் மருத்துவர்கள் குழுவொன்று கூறியுள்ளது.
எனினும் அல்-ஷிஃபா வைத்தியசாலைக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை இஸ்ரேல் ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
வைத்தியசாலைகளுக்கு கீழ் தமது நிலக்கீழ் தளங்களை ஹமாஸ் நிறுவியுள்ளதாகவும் அவை கட்டளை மையங்களாக செயற்படுவதாகவும் இஸ்ரேலிய அரசியல்வாதி ஒருவர் கூறியுள்ளார்.
எனினும் இந்தக் குற்றச்சாட்டை ஹமாஸ் நிராகரித்துள்ளது. அத்துடன் வைத்தியசாலைகள் மீது தாம் தாக்குதல் நடத்தவில்லை என இஸ்ரேல் கூறினாலும் வைத்தியசாலைகளை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதை ஐக்கிய நாடுகள் சபை உறுதிசெய்துள்ளது.
இந்த தாக்குதல்கள் காரணமாக பல்வேறு வைத்தியசாலைகளுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.
காசா நகரிலுள்ள தமது அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள ஐக்கிய நாடுகள் சபை, இந்த தாக்குதலில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் பலியாகியுள்ளனர் எனவும் கூறியுள்ளது.
இந்நிலையில் பொதுமக்களின் உட்கட்டமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வசதிகள் ஆகியன கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐ.நாவின் அபிவிருத்தி திட்டத்தின் நிர்வாக அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
காசாவின் வட பிராந்தியத்தில் சிக்கியுள்ள மக்கள் இஸ்ரேலின் தீவிர தாக்குதல்களுக்கு மத்தியில் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்துவரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்த ரஃபா எல்லையானது இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
எனினும் இன்று ரஃபா எல்லை ஊடாக வெளியேற அனுமதிக்கப்பட்டவர்கள் எந்தெந்த நாடுகளை சேர்ந்தவர்கள் என்ற விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை.
இதனிடையே யுத்த நிறுத்ததை ஏற்படுத்துவதற்கான அழைப்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெத்தன்யாகு மீண்டும் நிராகரித்துள்ளார்.
ஹமாஸ் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டு, பணய கைதிகள் மீட்கப்படும் வரை தமது படை நடவடிக்கை தொடரும் என பெஞ்ஜமின் நெத்தன்யாகு சூளுரைத்துள்ளார்.
இந்த நிலையில் லெனானில் இருந்து நடத்தப்பட்ட தாங்கி எதிர்ப்பு ஏவுகணை தாக்குதல்கள் பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும் இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதலை நடத்தியதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – லெபனான் எல்லையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா இயக்கம் உரிமை கோரியுள்ளது.
தற்போதைய தருணத்தில் இஸ்ரேலை ஆத்திரமூட்டும் செயற்பாடுகளில் ஹிஸ்புல்லா ஈடுபடக் கூடாது என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்திருந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா இயக்கம் மேற்கொண்டுள்ளது.