உலகம்

அரிசிக்கு கனேடிய மக்கள் அதிக கட்டணம் செலுத்தும் நிலை ஏன்? வெளியான பின்னணி

Published

on

அரிசிக்கு கனேடிய மக்கள் அதிக கட்டணம் செலுத்தும் நிலை ஏன்? வெளியான பின்னணி

மளிகைக் கடையில் அரிசிக்கு கனேடிய மக்கள் அதிக கட்டணம் செலுத்த நேரிடுவது ஏன் என்பது குறித்த விரிவான பின்னணி வெளியாகியுள்ளது.

ஒன்ராறியோவில் இருந்து செயல்படும் மொத்த விற்பனையாளரான செல்வஹீசன் என்பவர் தெரிவிக்கையில், தமது வாடிக்கையாளர்கள் பலர் தற்போது இந்த நெருக்கடியை அதிகமாக எதிர்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

கிரேட்டர் ரொறன்ரோ பகுதியில் சின்னதாய் மளிகைக் கடைகளை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் தமது வாடிக்கையாளர்கள் என குறிப்பிட்டுள்ள அவர், தற்போது சந்தையில் அரிசியின் வரத்து மிகவும் குறைவாக உள்ளது என்றார்.

உலக அளவில் அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதம் அளவுக்கு பூர்த்தி செய்யும் இந்தியா போன்ற ஒரு நாடு விதித்துள்ள ஏற்றுமதி கட்டுப்பாடுகளே அதற்கு முதன்மை காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவே கனடாவில் முக்கிய உணவு தானியங்களின் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். ஜூலை மாதம் கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகிய மூன்று நாட்களுக்குப் பிறகு, இந்திய அரசாங்கம் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதியை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்தது.

மேலும், இந்திய சந்தையில் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யவும் மற்றும் உள்நாட்டு சந்தையில் விலை உயர்வை குறைக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கமளித்திருந்தது.

அத்துடன் கடந்த ஆண்டு செப்டம்பரில், உள்நாட்டு சந்தையில் அரிசி விலையை குறைக்க அரசாங்கம் 20 சதவீத ஏற்றுமதி வரியை விதித்தது. இருப்பினும், அரிசி விலை அதிகரித்தே காணப்பட்டது.

சில்லறை விற்பனை விலை கடந்த ஆண்டில் 11.5 சதவீதமும், கடந்த மாதத்தில் 3.0 சதவீதமும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு 20 சதவீத ஏற்றுமதி வரியை இந்திய அரசு விதித்தது.

இந்த முடிவு கனேடிய நுகர்வோர் மற்றும் சில்லறை விற்பனையாளர்களை பாதித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் மக்களின் செலவு செய்யும் திறனானது மொத்தமாக சரிவடைந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 8 பவுண்டுகள் கொண்ட வெள்ளை அரிசி பை ஒன்று 6 டொலருக்கு விறபனையாகியுள்ளது. ஆனால் தற்போது மொத்த விற்பனை விலை 9 முதல் 9.50 டொலராக அதிகரித்துள்ளது.

மேலும், இந்திய அரசின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு முன்னர் 10 பவுண்டு பாசுமதி அரிசியின் விலை 10 கனேடிய டொலராக இருந்தது. ஆனால் தற்போது அதன் விலை, 11 முதல் 12 கனேடிய டொலராக அதிகரித்துள்ளது.

மட்டுமின்றி, Uber Eats போன்ற செயலிகளில் 10 பவுண்டு பாசுமதி அரிசியின் விலை 21 முதல் 22 கனேடிய டொலருக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version