உலகம்

இஸ்ரேலுடன் இரகசிய தகவல்களை பகிர்ந்த 8 இந்தியர்களுக்கு கத்தார் அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பு

Published

on

இஸ்ரேலுடன் இரகசிய தகவல்களை பகிர்ந்த 8 இந்தியர்களுக்கு கத்தார் அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பு

நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் குறித்து முக்கியமான தகவல்களை இஸ்ரேலுடன் பகிர்ந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 இந்தியர்களுக்கு கத்தார் முதன்மை அமர்வு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அல் தஹ்ரா நிறுவனத்தைச் சேர்ந்த 8 இந்திய ஊழியர்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் இன்று (26.10.2023) தீர்ப்பு வழங்கியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த 8 பேருக்கும் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், விரிவான தீர்ப்புக்காகக் காத்திருப்பதாகவும் இந்திய வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் திகதி இரவு, கத்தாரில் பணியாற்றி வந்த 8 முன்னாள் இந்திய கடற்படையினர், உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்த திடீர் நடவடிக்கைப் பிறகு அவர்கள் அனைவரும் தோஹாவில் உள்ள சிறையில் மற்ற கைதிகளிடமிருந்து தனியாக வைக்கப்பட்டனர்.

இந்த இந்தியர்களில் மூன்று பேர் ஓய்வு பெற்ற கேப்டன்கள், நான்கு பேர் கமாண்டர்கள் மற்றும் ஒருவர் மாலுமி. இவர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ‘கடும் குற்றவாளிகளைப்’ போல தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று ஒரு முன்னாள் இந்திய தூதாண்மை அதிகாரி கூறியுள்ளார்.

ஆனால் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் தோஹாவில் பணிபுரிந்த போது நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் குறித்து முக்கியமான தகவல்களை இஸ்ரேலுடன் பகிர்ந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கத்தாரில் உள்ள தஹ்ரா குளோபல் டெக்னோலஜிஸ் நிறுவனம் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி மற்றும் அது தொடர்பான சேவைகளையும் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த 8 பேர் பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில் இந்த 8 பேரும் கட்டார் நாட்டின் அதிநவீன நீர் மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேல் நாட்டுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.

அந்த நீர் மூழ்கி கப்பலின் சிறப்பம்சமே தண்ணீருக்குள் சென்றுவிட்டால் எதிரி நாட்டினரால் கண்டுபிடிக்கவே முடியாது. அந்த அளவுக்கு திறன் வாய்ந்தது.

அந்த கப்பல் குறித்து இவர்கள் 8 பேரும் உளவு பார்த்து இஸ்ரேல் நாட்டுக்கு கூறியதாக குற்றம்சாட்டப்பட்டன.

கத்தாரில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் சட்டம் உள்ளது. சிறையில் உள்ள இந்த இந்தியர்கள் தாஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டிங் சர்வீசஸில் பணிபுரிந்து வந்தனர்.

இந்த நிறுவனம் கத்தார் கடற்படைக்காக நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் பணியாற்றி வந்தது. ரேடாரை தவிர்க்கும் ஹைடெக் இத்தாலிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

கடந்த மே மாதம் இந்த நிறுவனத்தை மூட கத்தார் உத்தரவிட்டது. அதன் ஊழியர்களில் சுமார் 70 பேர் மே மாத இறுதிக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இவர்களில் பெரும்பாலானோர் இந்திய கடற்படையின் முன்னாள் பணியாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தண்டனைக்கு உள்ளானவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் தொடர்ந்து செயல்படுவதுடன், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், “இந்த வழக்குக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். அது குறித்து நெருக்கமாகக் கவனித்து வருகிறோம். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தூதரக மற்றும் சட்ட உதவிகளை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம்.கத்தார் அரசிடமும் இது குறித்து பேச்சு நடத்துவோம்,” என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்- சிவா மயூரி

Exit mobile version