உலகம்
தற்கொலைக்கு தூண்டிய சமூக ஊடகம்: நீதிமன்றம் சென்றுள்ள பெற்றோர்
தற்கொலைக்கு தூண்டிய சமூக ஊடகம்: நீதிமன்றம் சென்றுள்ள பெற்றோர்
சமூக ஊடகங்கள், இளம் பிள்ளைகளை தற்கொலைக்கு தூண்டுவதாக ஒரு குற்றச்சாட்டு பரவலாக காணப்படுகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் ஒரு இளம்பெண்ணின் தற்கொலைக்குக் காரணம் ஒரு சமூக ஊடகம் என்று கூறி, அவளது பெற்றோர் நீதிமன்றம் சென்றதைக் குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
யூடியூபில், நீங்கள் ஒரு குறிப்பிட்ட நடிகரின் திரைப்படக் காட்சிகளை அடிக்கடி பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு, நீங்கள் யூடியூபைத் திறந்தாலே, தொடர்ச்சியாக அந்த நடிகர் நடித்த திரைப்படக் காட்சிகள் அங்கு இடம்பெற்றிருப்பதைக் காணமுடியும்.
பல சமூக ஊடகங்கள் அவ்வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது, உங்கள் தனிப்பட்ட தரவுகள் அந்த சமூக ஊடகங்களில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும். நீங்கள் எந்த வகையான வீடியோக்களை விரும்பிப் பார்க்கிறீர்கள் என்பதை கவனித்து, தொடர்ச்சியாக அதே வகையான வீடியோக்களை சமூக ஊடகங்கள் உங்களுக்குக் காட்டும்.
பிரான்சிலுள்ள Cassis என்னும் நகரில் வாழ்ந்துவந்த Marie என்னும் இளம்பெண், bullying எனும் வம்புக்கிழுத்தல் பிரச்சினையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறாள்.
இப்போதுதான் பல பிள்ளைகள் பெற்றோரிடம் உதவி கோருவதில்லையே. பல பெற்றோர்களுக்கும் பிள்ளைகள் சொல்வதை கேட்க நேரமும் இல்லை. அவர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக, பிள்ளைகளின் நலனுக்காக இராப்பகலாக உழைக்கிறார்கள். அதனால், களைத்துப்போய் வீடு வரும் பெற்றோர் பலருக்கு பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதே தெரியாது.
வேறு சில பெற்றோரோ, செல்லம் கொடுக்கிறோம் என்ற பெயரில், பிள்ளைகள் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுக்கிறார்கள். பிள்ளைகள் மொபைல் போனில் என்ன பார்க்கிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியாது.
ஆக, பிள்ளைகள் பலர் தங்கள் பிரச்சினைகளுக்காக சமூக ஊடகங்களைத்தான் நாடுகிறார்கள். அப்படித்தான் Marieயும் தன் பிரச்சினைகளுக்காக டிக் டாக் என்னும் சமூக ஊடகத்தின் உதவியை நாடினாள்.
டிக் டாக், bullying பிரச்சினையில் அவளுக்கு உதவுவதற்கு பதிலாக, தொடர்ச்சியாக தற்கொலை வீடியோக்களை காட்டியுள்ளது. ஒரு கட்டத்தில், பிள்ளை தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டாள்.
பிள்ளையை இழந்த பெற்றோர், டிக் டாக் தங்கள் பிள்ளையை தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியதாக நீதிமன்றம் சென்றுள்ளார்கள்.
சிறு பிள்ளைகள், இளம் பிள்ளைகளுக்கு எதைக் காட்டுவது என்பது குறித்து சமூக ஊடகங்கள் கட்டுப்பாடுகளைப் பின்பற்றவேண்டும் என உலக நாடுகள் பலவற்றில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், Marieயின் பெற்றோர் டிக் டாக்குக்கெதிராக நீதிமன்றம் சென்றுள்ள விடயம் பெரிதும் கவனம் ஈர்த்துள்ளது