உலகம்

குளிரூட்டப்பட்ட லொறியிலிருந்து வந்த அழைப்பு… உயிர் பிழைத்த பெண்கள்

Published

on

குளிரூட்டப்பட்ட லொறியிலிருந்து வந்த அழைப்பு… உயிர் பிழைத்த பெண்கள்

பிரித்தானியாவின் எசெக்சில் குளிரூட்டப்பட்ட லொறி ஒன்றிற்குள் அடைபட்டு, 39 புலம்பெயர்வோர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் நினைவிருக்கலாம்.

இந்நிலையில், சமீபத்தில், அத்தகைய பயங்கர சம்பவம் ஒன்று மீண்டும் நடப்பது தவிர்க்கப்பட்டது குறித்த செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

நேற்று மதியம், பிபிசி ஊடகவியலாளரான Khue B. Luu என்பவருக்கு மொபைலில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், குளிரூட்டப்பட்ட லொறி ஒன்றில் சிலர் அடைபட்டுள்ளதாகவும், அவர்கள் பிரான்சிலிருந்து இங்கிலாந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது.

அவர் அதைப் படித்து முடிப்பதற்குள் ஒரு அழைப்பு வந்துள்ளது. அழைத்தவர், ஆறு பெண்கள் குளிரூட்டப்பட்ட ஒரு லொறிக்குள் சிக்கியிருப்பதாகவும், அவசரம், உடனே உதவுங்கள் என்றும் கேட்டுள்ளார்.

ஆனால், அந்த லொறியின் பதிவு எண்ணோ, அது எங்கிருக்கிறது, எந்த திசை நோக்கி பயணிக்கிறது என்ற எந்த தகவலும் அவருக்குத் தெரியவில்லை.

இதற்கிடையில், அந்த லொறிக்குள் இருந்த ஒரு பெண் இணைப்பில் வந்துள்ளார். குளிரில், வாழைப்பழங்கள் ஏற்றப்பட்ட அந்த லொறிக்குள் சிறிதளவே இடத்துக்குள் 10 மணி நேரமாக அடைக்கப்பட்டிருந்த நிலையில், தங்கள் நிலை குறித்த வீடியோக்கள் சிலவற்றையும் அனுப்பியுள்ளார் அந்தப் பெண்.

அத்துடன், ஏசி அணைக்கப்பட்டுவிட்டதாகவும், லொறி இங்கிலாந்துக்கு வராமல் வேறு பாதையில் திரும்பிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

உடனடியாக Khue B. Luu பிரான்சிலுள்ள பிபிசி, அதன் ஊடகவியலாளர்கள், மற்றும் சில ஊடகங்களைத் தொடர்பு கொண்டு விடயத்தை விளக்கியுள்ளார்.

ஆனால், லொறியின் பதிவு எண் தெரியாமல் யாராலும் ஒன்றும் செய்யமுடியவில்லை. அந்த நேரத்தில் Khueவை தொடர்புகொண்ட அந்த லொறிக்குள் இருந்த பெண், தனது GPS லொக்கேஷனை அனுப்ப, லொறி, பிரான்சிலுள்ள Lyonக்கு வடக்கே Drace என்னும் இடத்தில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் பயணிப்பது தெரியவந்துள்ளது.

இப்படி பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில் GPS இணைப்பு துண்டிக்கப்பட, அந்த லொறியிலிருந்த பெண்களின் காதலர்கள் அவர்களை லொறியில் ஏற்றும் முன் புகைப்படம் எடுத்துள்ளது Khueக்கு தெரியவர, அதன் மூலம் அந்த லொறியின் பதிவு எண்ணைக் கண்டுபிடித்துள்ளார் Khue.

உடனே பிரான்ஸ் பொலிசருக்கு தகவலளிக்கப்பட, பொலிசார் லொறியை மடக்கிவிட்டார்கள். அந்தப் பெண்கள் மீட்கப்பட்டதுடன், அந்த லொறியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் பொலிசார் இந்த விடயம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Exit mobile version