உலகம்

பாரிஸ் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட குரங்கு மண்டை ஓடுகள்

Published

on

பாரிஸ் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட குரங்கு மண்டை ஓடுகள்

பாரிஸ் நகரின் Charles de Gaulle விமான நிலையத்தில் 400 அரிதான குரங்கு இனங்களின் மண்டை ஓடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டில் மொத்தமாக 7 மாதங்களில் பறிமுதல் செய்யப்பட்ட எண்ணிக்கை இதுவெனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். 2022 மே மாதம் முதல் டிசம்பர் வரையில் 392 பொதிகளை சோதனை செய்ததில் மண்டை ஓடுகள் சிக்கியதாக குறிப்பிட்டுள்ளனர்.

பெரும்பாலும் கேமரூனில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் பொதிகளில் இவ்வாறான மண்டை ஓடுகள் சிக்குவதாக குறிப்பிட்டுள்ளனர். இது மட்டுமின்றி, மற்ற உயிரினங்களின் மண்டை ஓடுகள் அல்லது எலும்புகளுடன் மேலும் நூற்றுக்கணக்கான பொதிகளையும் கைப்பற்றியதாக குறிப்பிட்டுள்ளனர்.

அரிதான மற்றும் பாதுகாக்கப்பட்ட இனங்களைக் கடத்துவது ஆயுதங்கள், ஆட் கடத்தல் மற்றும் போதைப்பொருளுக்குப் பிறகு அதிக லாபம் தரும் வர்த்தகமாக பார்க்கப்படுகிறது.

இந்த நீசமான வர்த்தகத்தில் ஆண்டுக்கு 8 முதல் 20 பில்லியன் யூரோ அளவுக்கு தொகை ஈட்டப்படுவதாக கூறுகின்றனர். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட மண்டை ஓடுகள் அமெரிக்காவில் வேட்டையில் ஈடுபடுபவர்களுக்கு பரிசாக வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

மேலும், சிறிய விலங்குகளின் மண்டை ஓடுகளுக்கு 30 முதல் 50 யூரோக்கள் வரை அளிக்கப்படுகிறது. சிம்பன்சியின் மண்டை ஓடுகளுக்கு 1,000 யூரோக்கள் வரை அளிக்கப்படுகிறது. தற்போது கைப்பற்றப்பட்டுள்ள மண்டை ஓடுகள் அனைத்தும் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட இருக்கிறது.

Exit mobile version