உலகம்

இட்லி வியாபாரம் செய்யும் சந்திரயான் 3 திட்ட பொறியாளர்..காரணம் இதோ!

Published

on

இட்லி வியாபாரம் செய்யும் சந்திரயான் 3 திட்ட பொறியாளர்..காரணம் இதோ!

சந்திரயான் 3 விண்கல திட்டத்திற்கு ஏவுதளம் அமைத்த திட்ட பொறியாளருக்கு சம்பளம் வழங்காததால், இட்லி வியாபாரம் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரயான் 3 விண்கல திட்டத்தின் மூலம் நிலவுக்கு விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியது ஒரு பக்கம் இருந்தாலும், திட்டத்திற்கு பணியாற்றிய பொறியாளர் ஒருவர் வாழ்வாதாரத்திற்கு சிரமப்படுவது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்துவதற்கு பல தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் இணைந்து பணியாற்றின. அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியில் உள்ள ஹெச்.இ.சி என்ற பொதுத்துறை நிறுவனம் இணைந்து பணியாற்றியது.

இந்த நிறுவனத்தில் உள்ள தொழில்நுட்ப பிரிவில், மத்தியப்பிரதேச மாநிலம் ஹர்டா மாவட்டத்தை சேர்ந்த தீபக் குமார் உப்ரரியா என்ற பொறியாளர் பணியாற்றி வந்தார். இவர், இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கல திட்டத்திற்காக மடங்கும் நடைமேடையையும், ஸ்லைடிங் கதவுகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில், தீபக் குமார் பணியாற்றிய ஹெச்.இ.சி நிறுவனம் தங்களுடைய 2,800 ஊழியர்களுக்கு 18 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை.

இதனால், தீபக் குமார் தன்னுடைய மகள்களுக்கு பள்ளி கட்டணத்தை கூட கட்ட முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார். எனவே, செலவே சமாளிக்க முடியாத காரணத்தினால் ராஞ்சியில் துர்வா பகுதியில் உள்ள பழைய சட்டமன்ற கட்டடத்திற்கு எதிரே சாலையில் ஒரு சிறிய உணவகத்தை அமைத்து இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.

இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தின் செலவை பார்த்து வருகிறார். அதாவது, காலையில் ஹெச்.இ.சி நிறுவனத்திற்கு சென்று பணியாற்றிவிட்டு, மாலையில் இட்லி விற்பனை செய்து வருகிறார்.

Exit mobile version