உலகம்
உக்ரைன் துறைமுகத்திற்கு வந்த முதல் தானிய கப்பல்
உக்ரைன் துறைமுகத்திற்கு வந்த முதல் தானிய கப்பல்
கருங்கடலின் புதிய பாதை வழியாக உக்ரைன் துறைமுகத்திற்கு இரண்டு தானிய கப்பல்கள் முதல் முறையாக வந்து சேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்தில் சனிக்கிழமை அந்த இரு தானிய கப்பல்களும் வந்து சேர்ந்துள்ளது. இதனால் 20,000 டன் கோதுமை உலகச் சந்தையில் வந்து சேரும் என்றே நம்பப்படுகிறது.
கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வலுக்கட்டாயமாக வெளியேறிய பின்னர், முதல் முறையாக தானிய கப்பல் உக்ரைன் துறைமுகத்தில் வந்துள்ளது.
ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் உக்ரைன் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் வெளியேறி வந்த நிலையில், தற்போது தானிய கப்பல்கள் துறைமுகத்திற்கு வந்துள்ளது என்றே அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த கப்பல்களில் உக்ரைன், துருக்கி, அஜர்பைஜான் மற்றும் எகிப்து மக்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக எகிப்து மற்றும் இஸ்ரேலுக்கு கோதுமை விநியோகம் முன்னெடுக்கப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
கருங்கடல் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய பின்னர், உக்ரைன் தானிய கப்பல்களுக்கு மிரட்டல் விடுத்து வந்தது ரஷ்யா. அத்துடன் இந்த வார தொடக்கத்தில், ஏவுகணைகள் மூலம் தானிய கப்பல் ஒன்றை ரஷ்யா குறிவைத்ததாக பிரித்தானியா குற்றம் சாட்டியது.
உக்ரைனை பொறுத்தமட்டில் சூரியகாந்தி எண்ணெய், பார்லி, மக்காச்சோளம் மற்றும் கோதுமை உள்ளிட்ட தானியங்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் முதன்மையான பங்கு வகித்து வருகிறது.
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்த நிலையில், சுமார் 20 மில்லியன் டன் தானியங்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் கிடங்குகள் மற்றும் துறைமுகங்களில் தேங்கியது. இது உலக அளவில் உணவு விலைகள் உயர்வுக்கு காரணமாக அமைந்ததுடன்,
மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உணவு பற்றாக்குறையை உருவாக்கும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியது. அத்துடன், ஆப்கானிஸ்தான், யேமன், சூடான் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகள் மனிதாபிமான உதவி கோரும் நிலைக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.