உலகம்

புதிய அணு ஆயுத நீா்முழ்கிக் கப்பல்: வடகொரியா அறிவிப்பு

Published

on

புதிய அணு ஆயுத நீா்முழ்கிக் கப்பல்: வடகொரியா அறிவிப்பு

அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட புதிய நீா்முழ்கிக் கப்பலை உருவாக்கியுள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று, எதிரிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட புதிய நீா்மூழ்கிக் கப்பலை வட கொரிய பொறியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.

‘ஹீரோ கிம் குன் ஆக்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நீா்முழ்கிக் கப்பல், கடலின் மேற்பரப்புக்கு வராமல் நீருக்குள் இருந்தபடியே ஆயுதங்களை ஏவும் வல்லமை கொண்டது என தெரிவித்துள்ளது.

எனினும், வட கொரியா கூறும் அளவுக்கு அந்த நீா்மூழ்கிக் கப்பலின் செயல்திறன் இருப்பது குறித்து தென் கொரிய அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனா்.

மேலும், அந்த நீா்மூழ்கிக் கப்பல் பயன்படுத்துவதற்கு தயாரான நிலையில் இருப்பதற்கான வாய்ப்பில்லை என்றும் அவா்கள் கூறியுள்ளனர்.

1950-53-ஆம் ஆண்டின் கொரிய போருக்குப் பிறகு அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து அவ்வப்போது கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இது, தங்களது நாட்டின் மீது போா் தொடுப்பதற்கான ஒத்திகை என்று வட கொரியா கருதுகிறது.

அத்தகைய பயிற்சிகள் நடந்தால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வட கொரியா ஏவுகணைகளை வீசி சோதித்து வருகிறது.

இந்தச் சூழலில், தனது அணு ஆயுதத் தாக்குதல் திறனை வெளிப்படுத்தும் வகையில் ஆளில்லா நீா்முழ்கியை உருவாக்கியுள்ளதாக ஏற்கெனவே அறிவித்துள்ள வட கொரியா, அணு ஆயுதத் தாக்குதல் திறன் கொண்ட நீா்மூழ்கிக் கப்பலை உருவாக்கியுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது.

Exit mobile version