உலகம்
கல்லைக் கட்டி ஆற்றில் வீசப்பட்ட சிறுவன்: உதவியை நாடும் சர்வதேச பொலிசார்
கல்லைக் கட்டி ஆற்றில் வீசப்பட்ட சிறுவன்: உதவியை நாடும் சர்வதேச பொலிசார்
ஜேர்மனியில் டானூப் நதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் தொடர்பில் சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போல் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் விவகாரம் ஜேர்மன் பொலிசாரை திணறடிக்க வைத்துள்ளது. 5 அல்லது 6 வயது மதிக்கத்தக்க அந்த சிறுவனின் சடலமானது பவேரியாவில் கடந்த ஆண்டு மே மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுவனை கல் ஒன்றால் கட்டி டானூப் நதியில் வீசியுள்ளனர். ஜேர்மன் பொலிசாரால் சிறுவனை அடையாளம் காண முடியவில்லை என்பதுடன் மரண காரணத்தையும் உறுதி செய்ய முடியாமல் போயுள்ளது.
இந்த நிலையிலேயே சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போல் உதவியை நாடியதுடன், Black Notice எனப்படும் அடையாளம் தெரியாத உடல்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க சர்வதேச எச்சரிக்கை விடுக்கவும் வலியுறுத்தியது.
கடந்த மே 19 அன்று சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டபோது, எத்தனை நாட்கள் தண்ணீரில் இருந்தது என்பது தெரியவில்லை என்று இன்டர்போல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சுமார் 15 கிலோ உடல் எடையுடன் 3 அடி 7 அங்குலம் உயரத்துடன் காணப்பட்டான் என பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், சிறுவன் ஜேர்மனிக்கு வெளியே சில காலம் தங்கியிருந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ள பொலிசார், 195 உறுப்பு நாடுகளைக் கொண்ட இன்டர்போல் இந்த விவகாரத்தில் உதவ முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், சிறுவன் தொடர்பில் எங்கேயோ ஒருவருக்கு உண்மை தெரியும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், உதவ முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.