உலகம்
பல ஆண்டுகளாக தேடி வந்த கொடூர குற்றவாளி

பல ஆண்டுகளாக தேடி வந்த கொடூர குற்றவாளி
இத்தாலியின் மிக ஆபத்தான தலைமறைவு குற்றவாளி ஒருவர் தனது கால்பந்து வெறி காரணமாக 11 ஆண்டுகளுக்கு பிறகு பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.
இத்தாலியின் மூன்றாவது பெரிய நகரமான நேபிள்ஸ் பகுதியில் இயங்கிவரும் Camorra என்ற ஆபத்தான குழுவினருக்கு நெருக்கமானவர் 60 வயதான Vincenzo La Porta.
கடந்த 11 ஆண்டுகளாக இத்தாலி பொலிசாரால் இவர் தேடப்பட்டு வந்துள்ளார். ஆனால் இந்த ஆண்டு துவக்கத்தில் கிரேக்கத்தில் கால்பந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களில் இவரது முகமும் பதிவாகியிருந்தது.
கால்பந்து வெறியரான Vincenzo La Porta, தாம் ஆதரிக்கும் அணியினரின் வெற்றியை கொண்டாடிய நிலையிலேயே, அதிகாரிகள் பார்வையில் சிக்கியுள்ளார்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நெப்போலி அணி தனது முதல் இத்தாலிய சாம்பியன்ஷிப்பை வென்ற பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெப்போலி அணி பட்டம் வென்றதும், தாம் தலைமறைவு குற்றவாளி என்பதை மறந்து La Porta கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இத்தாலியில் La Porta மீது ஊழல், வரி ஏய்ப்பு, குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக, அவர் ஏற்கனவே 14 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கிரேக்கத்தில் இருந்து அவரை இத்தாலிக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
செய்தி ஊடகம் ஒன்றிடம் La Porta தெரிவிக்கையில், கிரேக்கத்தில் தாம் புதிய வாழ்க்கை ஒன்றை துவங்கியுள்ளதாகவும், 9 வயதில் ஒரு மகன் இருப்பதாகவும், சமையல்காரனாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, தாம் ஒரு இருதய நோயாளி எனவும், இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டால், தமது குடும்பமும் தாமும் நாசமாகிவிடும் சூழல் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: கனடா- இந்தியா மோதல் போக்கு... மசூர் பருப்பு பற்றாக்குறை? - tamilnaadi.com