உலகம்
சிறந்த விமான சேவை தர வரிசை! – தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்த நிறுவனம்
உலகளவிலான விமான போக்குவரத்தில் 2022ம் ஆண்டிற்கான சிறந்த விமான சேவைக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விமான சேவையின் தரம், சேவை, நிலைத்தன்மை, புதிய வசதிகள், பயணிகளின் வசதி, பணியாளர்கள் சேவை, பாதுகாப்பு உள்ளிட்ட பலவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கட்டார் விமான சேவை ‘ஏர்லைன்ஸ் ஆப் தி இயர்’ தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டும் கட்டார் நாட்டின் இதே விமான சேவை நிறுவனமே முதலிடம் வகித்தது. கொரோனா கால கட்டத்திலும் மக்கள் சேவைக்காக கட்டார் ஏர்லைன்ஸ் விமான சேவை தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
இதன் பயணிகள் சேவை, தொடர்ச்சியான விமான இயக்கம் போன்ற காரணங்களால் கட்டார் ஏர்லைன்ஸ், உலகின் சிறந்த விமான சேவை இயக்கமாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்டியலில், ஏர் நியூசிலாந்து மற்றும் எதிஹாட் ஏர்வேஸ் ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.
ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ், குறிப்பாக பாதுகாப்பு அம்சத்தில், தொடர்ந்து உலகின் சிறந்த விமான நிறுவனங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. இந்நிறுவனம் நியூசிலாந்து, அமெரிக்கா, ஆசியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு விமான சேவையை வழங்கி வருகிறது.
குவாண்டாஸ், உலகின் சிறந்த பிராந்திய விமான சேவை நிறுவனம் என்றும் பெயரிடப்பட்டது. 20 இடங்கள் கொண்ட இந்த பட்டியலில், ஏர் இந்தியா உள்ளிட்ட இந்திய நிறுவங்கள் எதுவும் இடம்பிடிக்கவில்லை.
#World
You must be logged in to post a comment Login