உலகம்
லெபனானில் அன்றாட வாழ்வு ஸ்தம்பிதம்!!!
லெபானானில் அரச ஊழியர்களுக்கு போதுமான சம்பளம் கிடைக்காத நிலையில் அவர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நாட்டை மேலும் சீர்குலையச் செய்துள்ளது.
சுமார் 100 வீதமான அரச ஊழியர்களும் முழுமையான அல்லது பகுதி அளவு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பெய்ரூட் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
வரும் ஓகஸ்டில் இரவு நேரங்களில் வேலை செய்வதை நிறுத்துவதாக பெய்ரூட்டின் சர்வதேச விமானநிலைய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் கடந்த வாரம் அறிவித்திருந்தனர்.
இந்த சூழல் நீதிமன்றங்கள் தொடக்கம் பாடசாலைகள் வரை பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.
குற்றவியல் வழக்குகளில் வேலை நிறுத்தம் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் முன்கூட்டிய விடுதலைகள் அல்லது சிறைத் தண்டனையை குறைக்கும் நடைமுறைகளில் தாமதத்தை ஏற்படுத்தக் காரணமாகியுள்ளது.
“நீதிமன்ற முறைமை சரியாக செயற்பட்டிருந்தால் எனது கட்சிக்காரர்கள் தற்போது விடுதலை பெற்றிருக்கக் கூடும்” என்று வழக்கறிஞரான ரபீக் உரே கரைசி தெரிவித்துள்ளார்.
லெபனான் நாணயத்தின் வீழ்ச்சி இந்தப் பிரச்சினையின் மையமாக உள்ளது. சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவதற்கு உளவியல் மருத்துவர் ஒருவர் அந்தக் கைதியை பரிசோதிக்க வேண்டும். அவ்வாறான மருத்துவருக்கு அரசு தற்போது 2 அமெரிக்க டொலருக்கு குறைவான கட்டணத்தையே வழங்குகிறது. இதனால் மருத்துவர்கள் அந்தப் பணிக்கு முன்வருவதில்லை.
லெபனானின் லிரா நாணயம் 2019 தொடக்கம் மோசமான சரிவை சந்தித்துள்ளது. இதனால் கடந்த வாரத்தின் நாணய மாற்று விகிதத்தின்படி மாதாந்த குறைந்த சம்பளம் 450 டொலரில் இருந்து 24 டொலர் வரை வீழ்ச்சி கண்டுள்ளது.
அரசு புதிய வரவு செலவுத் திட்டம் அல்லது சம்பள அதிகரிப்புக்கு ஒப்புதல் அளிக்கத் தவறியுள்ளது. அமைச்சுகளிலும் காகிதம் மற்றும் மை போன்ற அடிப்படை பொருட்கள் தீர்ந்து வருகின்றன.
லெபனான் சீர்திருத்த செயற்பாட்டுக் குழுவின் நிறுவன உறுப்பினரான கிரைசி, அமைப்பின் சீரழிவு மேலும் மேலும் தெளிவாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டார்.
“மூன்று வாரங்களுக்கு முன் நான் (பொலிஸ் நிலையம் ஒன்றில்) இருந்தேன். அங்கு கைது செய்யப்பட்ட சிலர் இடம் இல்லாமல் குளியலறையில் உறங்குகின்றனர்” என்று அவர் குறிப்பிட்டார்.
லெபனானின் நிலை பரிதாபமானது. ஆட்சி அமைப்பின் கடைசி தூண்களாக உள்ள நீதித் துறை மற்றும் பாதுகாப்பு அமைப்பு வீழ்ச்சி காணும்போது ஒட்டுமொத்த சமூகமும் வீழ்ச்சி கண்டுவிடும். இந்த சுரங்கத்தின் முடிவில் எந்த வெளிச்சத்தையும் காண முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
லெபனான் நாணய வீழ்ச்சியால் அந்நாடு முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதோடு அங்குள்ள மக்களின் சம்பளத்தின் மதிப்பு 90 வீதத்திற்கு அதிகம் வீழ்ச்சி கண்டுள்ளது. லெபனானின் வறுமை 74 வீதத்திற்கு மேல் அதிகரித்திருப்பதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
#WorldNews
You must be logged in to post a comment Login