இலங்கை
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தலைவி புதிய சாதனை
மகளிருக்கான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி துடுப்பாட்டத் தரவரிசையில் இலங்கை வீராங்கனை சமரி அத்தபத்து முதலிடம் பெற்றுள்ளார்.
இன்றையதினம் (04.07.2023) வெளியிடப்பட்ட புதிய தரவரிசைப் பட்டியலின்படி, இலங்கை கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தபத்து முதலிடம் பெற்றுள்ளார்.
33 வயதான சமரி அத்தபத்து ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான ஐசிசி துடுப்பாட்டத் தரவரிசையில் 758 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றுள்ளார்.
இதேவேளை அவுஸ்திரேலியாவின் பேத் மூனி 752 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்திலும் தென் ஆபிரிக்காவின் லோரா வோல்வார்ட் 732 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தில் உள்ளனர்.
சனத் ஜயசூரியவுக்கு அடுத்ததாக , ஆண்கள் அல்லது மகளிர் ஒருநாள் சர்வதேச போட்டிகளின் துடுப்பாட்டத்துக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடம் பெற்ற ஒரே இலங்கையர் சமரி அத்தபத்து ஆவார்.
இலங்கை வீராங்கனையொருவர், ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடம் பெற்றமை இதுவே முதல் தடவையாகும்.
இவர் நியூஸிலாந்து மகளிர் அணியுடனான ஒருநாள் சர்வதேச தொடரின் முதல் போட்டியில் ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களையும், அதேதொடரில் 3 ஆவது போட்டியில் 80 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 140 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
மொத்தமாக 3 போட்டிகளிலும் இவர் 248 ஓட்டங்களைக் குவித்ததன் மூலமே இந்த சாதனையை தனதாக்கியுள்ளார்.
You must be logged in to post a comment Login