தென்சீனாவில் சில மாதங்களுக்கு முன்னர் மட்டுமே திறக்கப்பட்ட ஹொங்கி பாலத்தின் (Hongqi Bridge) பெரும்பகுதி நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) திடீரென இடிந்து ஆற்றில் விழுந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஹொங்கி பாலம். இது, சீனாவின் மத்திய பகுதிகளைத் திபெத்துடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
பாலம் இடிந்து விழும் காட்சியில், பாலத்தோடு இணைந்த மலையின் ஒரு பகுதி முதலில் சரிந்து கீழே உள்ள ஆற்றில் விழுந்தது. அதன் காரணமாக ஏற்பட்ட இடிபாட்டால், பாலத்தின் தூண்கள் வளைந்து சரிந்து, கட்டுமானத்தின் பெரும்பகுதி ஆற்றில் விழுந்தது.
இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, மேர்காங்க் காவல்துறையினர் குறித்த மலைப்பகுதி மற்றும் பாலம் அமைந்த வீதிகளில் பிளவுகள் ஏற்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.
அதன் பின்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவ்வீதியில் போக்குவரத்துக்குத் தடை விதித்து, 758 மீட்டர் நீள தூரத்துக்குப் பாலத்தை திங்கட்கிழமை (நவம்பர் 10) மூடியிருந்ததாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாகச் செயற்பட்டதையடுத்து, மறுநாளே பிற்பகல் வேளையில் பாலத்தின் குறித்த பகுதி இடிந்து விழுந்துள்ளது.
இந்தச் சம்பவத்தின் காணொளி ‘X’ தளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வரும் நிலையில், பாலத்தின் கட்டுமானத்தின் தரம் குறித்துப் பலர் கவலை தெரிவித்து வருகின்றனர். சம்பவம் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

