மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நாடாளுமன்றத்தில் உறுதியளித்துள்ளார். கடல்வளங்களைப் பாதுகாப்பதற்கும், ஏற்றுமதியை நோக்கித் துறைமுகத்தை நகர்த்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (நவம்பர் 26) நடைபெற்ற வரவு-செலவுத் திட்டத்தின் கடற்றொழில் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

கடற்றொழில் விடயத்தில் இலங்கை இன்னும் பழமையான நிலையிலேயே உள்ளது என்பதை ஏற்றாக வேண்டும். ஆழ்கடல் உட்பட மீன்பிடியில் ஈடுபடும் படகுகள் குறைந்தது 10 வருடங்களாவது பழைய நிலையில் உள்ளன.

நவீன படகுகள் பற்றி கவனம் செலுத்தப்படாததாலும், பழைய படகுகளாலும் ஆழ்கடல் மீன்பிடி தொடர்பில் நம்பிக்கை குறைந்து, மீன்பிடித்துறை வலுவிழந்து வருகிறது.

இந்நிலையிலிருந்து நாம் மேம்பட வேண்டும், எமது மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் உறுதியாக உள்ளது.

கடற்றொழில் அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்துப் பேசிய அமைச்சர் 2025 வரவு – செலவுத் திட்டத்தில் அமைச்சுக்கு 11.4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவுக்குக் கூடுதல் ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது.

மீன்பிடித்துறைமுகம் அபிவிருத்திக்காக மேலும் 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தைக் கையாள்வதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நன்னீர் மீன்பிடித்துறைக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மயிலிட்டி உட்பட வடக்கிலுள்ள மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். கடலரிப்பைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்து ரின் மீன் இறக்குமதி செய்யும் நிலை காணப்பட்டது. அதற்கு நாம் கடந்த வருடம் முற்றுப்புள்ளி வைத்தோம். தற்போது இலங்கையிலேயே ரின்மீன் உற்பத்தி செய்யப்படுகின்றது.

கருவாடு மற்றும் மாசி உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கு கடந்த காலங்களில் இருந்த உப்புப் பிரச்சினை தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் இறுதியாக, மீனவ கிராமங்களுக்கே நேரில் சென்று தாம் தீர்வுகளை வழங்கி வருவதாகவும், மீனவர்களின் பிரச்சினைகள் எமக்குத் தெரியும் என்றும் அவற்றைத் தீர்ப்பதற்குரிய உரிய தலையீடுகளைச் செய்வோம் என்றும் உறுதியளித்தார்

Exit mobile version