வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவைக் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், புத்தல – கதிர்காமம் வீதியில் உள்ள காட்டுப் பகுதி ஒன்றில் இருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (அக் 31) மாலை, குறித்த வீதியின் 16 ஆவது மைல் கல்லுக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியிலிருந்து CID அதிகாரிகள் மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளனர்.
கொலையை மேற்கொண்ட சந்தேகநபர்கள் இந்த மோட்டார் சைக்கிளில்தான் தப்பிச் சென்றுள்ளனர். விசாரணைகளின்படி, அவர்கள் கெக்கிராவப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் செயலிழந்துள்ளது.
இதையடுத்து, அவர்கள் மோட்டார் சைக்கிளைக் காட்டுப் பகுதியில் போட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். மேலும், தப்பிச் செல்லும் வழியில் அவர்கள் காட்டு யானையின் தாக்குதலுக்கும் இலக்காகி, அதிலிருந்து தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள், மேலதிக விசாரணைகளுக்காகக் கதிர்காமம் காவல் நிலையத்தில் CID அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

