வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 25,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு விநியோகத்தில், தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டாலோ அல்லது தகுதியற்றவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டாலோ, அதற்கு அரச அதிகாரிகளே பொறுப்புகூற வேண்டும் என யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரம் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
மாவட்டத்தின் பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட (முற்றிலும் சேதமடைந்த, பகுதி சேதமடைந்த, அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட) அனைத்து வீடுகளுக்கும் இந்த ரூபா 25,000 உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், கிராம மட்ட அலுவலர்கள் நேரடியாகப் பிரிவுக்குச் சென்று தரவுகளைப் பெற்றுக்கொள்வதைப் பிரதேச செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
எனினும், இதில் குளறுபடிகள் ஏற்படின் அதற்குப் பிரதேச செயலாளர் உட்பட குறித்த பிரிவுக்குரிய கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த நிவாரண உத்தியோகத்தர் ஆகியோர் கூட்டாகப் பொறுப்புக் கூற வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதியானவர்களின் பெயர்ப் பட்டியலை இற்றைப்படுத்தி உறுதி செய்து கிராம அலுவலர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகத்தில் தமிழ் மொழியில் காட்சிப்படுத்தி அதன் மென் பிரதியினை மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பி வைக்குமாறும் , மாவட்ட செயலாளரின் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

