இலங்கை

நீதியமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்: அதிகரிக்கும் அழுத்தம்

Published

on

இலங்கையின் நீதியமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி (Hector Appuhamy) தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்னிலையில் சந்தேக நபர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளமை இதுவே முதற் தடவை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (19) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்களுக்கான வரவு செலவுத் திட்டம் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் நடைமுறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு ஏதும் குறிப்பிடப்படவில்லை.

தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றியதை போன்று வரவு செலவுத் திட்டத்திலும் மக்களை தேசிய மக்கள் சக்தி ஏமாற்றியுள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்பு தற்போது மலினப்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் நடுவீதியில் மனித படுகொலைகள் இடம்பெறுகிறது.

இலங்கையில் முதன்முறையாக நீதிமன்றத்துக்குள் நீதிபதி முன்னிலையில் குற்றவாளி கூண்டில் உள்ள சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நீதியமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் கடந்த காலங்களை பற்றியும், தேசிய பாதுகாப்பு பற்றியும் மார்தட்டி பேசுவார்கள்.

தற்போது நிலைமை எவ்வாறு உள்ளது. இவ்விருவரும் பதவி விலக வேண்டும். தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் உறுப்பினர்கள் வாய்ச்சொல் வீரர்களாகவே உள்ளார்கள். எந்த பிரச்சினைகளுக்கும் இவர்களால் தீர்வு முன்வைக்க முடியாது” என தெரிவித்தார்.

Exit mobile version