இலங்கை
ராஜபக்சர்களை ஆதரித்த ஹக்கீம்! சபையில் அநுர தரப்பின் சரமாரியான பதிலடி
ராஜபக்சர்களுடன் கூட்டிணைந்து ஆட்சி அமைத்துவிட்டு இன்று அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் எதிர் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் விமர்சிப்பது அநீதியான செயற்பாடு என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியை தாங்கிப்பிடித்தே இதுவரை காலமும் ஆசனத்தை தக்கவைத்துகொள்கின்கிறீர்கள் எனவும் சாடியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று, மியன்மார் அகதிகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் முன்வைத்த கருத்துக்களுக்கு பதில் வழங்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
‘ஹர்ஷ டி சில்வா இவ்வாறான கருத்துக்களை முன்மொழிந்திருந்தால் பரவாயில்லை. அதேபோல நாங்கள் ஒருபோதும் ராஜபக்சர்களுடன் கூட்டணியும் அமைக்கவில்லை.
நீங்கள்தான் அனைத்து அரசாங்கங்களுடனும் இணைந்து மிகவும் மோசமான இனவாதத்தை விதைத்துள்ளீர்கள்.அனைத்து அரசாங்கங்களிலும் பங்களித்துள்ளீர்கள்.
என்றாவது முஸ்லிம் காங்கிரசில் முக்கியமான தேர்தலில் போட்டியிட்டுள்ளீர்களா? ஐக்கிய மக்கள் சக்திக்கே முட்டுக்கொடுத்து ஆசனத்தை தக்கவைத்துகொள்கின்கிறீர்கள்.
எமது கருத்துக்களை எதிர்க்க வேண்டாம். மேலும் நீங்கள் முஸ்லிம் மக்களின் தலைவர் என்பதால் உங்களுக்கு முழுமையான மதிப்பை வழங்க நாங்கள் முன்வருவோம்.
ஆனால் அதை தாண்டி நீங்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடனோ அல்லது மொட்டு தரப்புடனோ இணைந்தே ஆசனத்தை தக்கவைப்பீர்கள்.
அதேபோல அரசியலமைப்பு சபையில் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு யாரும் வாய்ப்பை வழங்கவில்லை.
ஆனால் நாங்கள் வழங்கியுள்ளோம். நீங்கள் சஜித் தரப்புக்கே முட்டு கொடுத்தீர்கள். உங்களை நியமித்தார்களா. ஒருபோதும் இல்லை.
ஆகவே புரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய வங்குரோத்து நிலைக்கு எம் மக்களை பலிகடா ஆக்கவேண்டாம்.” என்றார்.