இலங்கை
ஸ்டாலினுடன் செல்பி எடுத்த சாணக்கியன்
ஸ்டாலினுடன் செல்பி எடுத்த சாணக்கியன்
சென்னையில் இடம்பெறும் 2025 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்தின் இறுதி நாளில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (M K Stalin) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுடன் (R.Shanakiyan) செல்பி எடுத்துள்ளார்.
அத்துடன் இதன்போது ஈழத்தமிழ் அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் தமிழக முதல்வருடன் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து சாணக்கியன் மேலும் தெரிவிக்கையில், இன்றைய தினம் (12.01.2025) தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட கண்காட்சியில் தமிழகத்தில் வாழும் புலம்பெயர் இலங்கை அகதிகளின் விற்பனையகங்களும் இடம்பெற்றிருந்தது.
அவர்களின் தொழில்துறை ஊக்கமானது மிகுந்த மனமகிழ்வை உண்டாக்கியது. இவ் நிகழ்வில் பல காலமாக அகதிகளாக வாழும் எம்மவர்களை மற்றும் நீண்டகால நண்பர்களை சந்தித்ததுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இவ் விழாவிற்கு வருகை தந்திருந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததுடன் அவரே அவரது தொலைபேசியில் எம்மை செல்பி எடுத்துக் கொண்டார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் (M. A. Sumanthiran) என்னுடன் கலந்து கொண்டிருந்தனர்.” என தெரிவித்தார்.
இதேவேளை சென்னையில் இடம்பெறும் குறித்த நிகழ்விற்கு சென்ற போதே நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் (S. Shritharan) விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.