இலங்கை
வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்பில் அர்ச்சுனா வெளியிட்ட தகவல்கள்! நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட வாதம்
வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்பில் அர்ச்சுனா வெளியிட்ட தகவல்கள்! நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட வாதம்
யாழ்ப்பாணம்(Jaffna) போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறிய விடயங்கள் உண்மை என அர்ச்சுனா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனிடம் 100 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி யாழ். மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மனுதாரரான வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தி இறுதி யுத்தம் முடிவடைந்த நிலையில் தடுப்புக் காவலில் இருந்த போது அங்கு அவருக்கு நிகழ்ந்த விடயங்கள் தொடர்பில் பிரதிவாதி வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவினால் பல விடயங்கள் அவதூறாக கூறப்பட்டுள்ளது.
மற்றும் கடந்த 09ஆம் திகதி இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலைக்குள் நுழைந்து வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தியுடன் சில வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டு, அவருடன் பிணக்கிற்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பிலும், அன்றைய தினத்தில் இராமநாதன் அர்ச்சுனா தன்னுடைய முகப்புத்தகத்தில் வெளியிட்ட காணொளி ஊடாக அவதூறு பரப்பப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்றைய தினம்(30) திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தனது கட்சிக்காரர் கூறிய விடயங்கள் அனைத்தும் உண்மை எனவும் அவற்றை மன்றில் நிரூபிக்க தயாராக இருக்கிறோம் என மன்றில் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு விசாரணைக்காக திகதியிடப்பட்டுள்ளது.