இலங்கை
இராணுவத்தினரின் காணிகளை விடுவிக்க வடக்கு மக்கள் கோரவில்லை – வட மாகாண ஆளுநர்
இராணுவத்தினரின் காணிகளை விடுவிக்க வடக்கு மக்கள் கோரவில்லை – வட மாகாண ஆளுநர்
வடக்கு மக்கள் இராணுவத்தினரின் காணிகளை விடுவிக்கக் கோரவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் (N. Vethanayagan) தெரிவித்துள்ளார்.
அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்துள்ளேன் என வடக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்
பூனையன்காடு இந்து மயானத்தில் நேற்று (25.12.2024) இடம்பெற்ற மர நடுகை நிகழ்வில் உரையாற்றிய போதே ஆளுநர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், 2015 ஆம் ஆண்டு காலத்தில் யாழ்.(Jafffna) மாவட்டச் செயலராக நான் இருந்தபோது படிப்படியாக பல பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்கள் குடியமரவில்லை என பாதுகாப்புத் தரப்பினர் எங்களுக்கு திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் வீட்டுத் திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்தினோம். மக்களும் எதிர்பார்த்ததைப் போன்று மீள்குடியமர்ந்தார்கள். 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தொடர்ந்து காணி விடுவிப்புக்கள் நடைபெறவில்லை.
இந்த ஆண்டு சிறிய அளவில் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. விடுவிக்கப்பட்ட காணிகளை விவசாயபூமியாக மாற்றுவதுதான் நீங்கள் எங்களுக்கு செய்யும் உதவி. இடம்பெயர்ந்தவர்களின் வலி எனக்கும் தெரியும். நானும் இடம்பெயர்ந்த ஒருவன்தான்.
தற்போது யாழ். மாவட்ட இராணுவத்த தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள யஹம்பத் நேர் சிந்தனை உடைய ஒருவர். எனவே இந்த அரசாங்கத்தின் காலத்தில் படிப்படியாக காணிகளை விடுவிக்க முடியும் என நம்புகின்றோம்.
இங்கு காணிகள், வீதிகள் விடுவிக்கப்பட்டதும் தென்னிலங்கையிலிருந்து சில தேவையற்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.
தென்னிலங்கை மக்களுக்கு இங்கு நடைபெறுவது என்ன என்ற உண்மையை தெளிவுபடுத்துமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையை சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்திருக்கின்றேன்.
வடக்கு மக்கள் எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருக்கின்றது என்பது எனக்குத் தெரியும். விரைவில் சாதகமான விடயங்கள் நடக்கும் என நம்புகின்றேன் என்று ஆளுநர் தெரிவித்தார்.