இலங்கை
இருவர் நாட்டை விட்டு தப்பியோட்டம்
பாதாள உலகக்குழுக்களின் இரண்டு முக்கிய தலைவர்கள் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரபல போதைப் பொருள் வர்த்தகரான குடு சலிந்து மற்றும் பாதாள உலகக் குழுத் தலைவர் பொடி லெசி ஆகியோர் இவ்வாறு நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இருவரும் அண்மையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். இருவரும் கடல் மார்க்கமாக நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குடு சலிந்து ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாக வேண்டுமென பாணந்துறை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும் குறித்த பிணை நிபந்தனையை குடு சலிந்து நிறைவேற்றத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் குடு சலிந்துவின் இல்லத்தில் பாரிய விருந்துபசாரம் நடத்தப்பட்டதாகவும் இதில் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள், போதைப் பொருள் வர்த்தகர்கள் பங்கேற்றிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பொடி லெசி என்ற பாதாள உலகக் குழு தலைவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பாதுகாப்பு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.