இலங்கை

யாழில் மோசமான நிலையை எட்டியுள்ள காற்றின் தரம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Published

on

யாழ்ப்பாணம்(Jaffna) மாவட்டத்தின் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, குறித்த மாவட்டத்தின் காற்றின் தரச்சுட்டெண் 154 முதல் 160 வரையான மட்டத்தில் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் காற்றின் தரம் தொடர்பில் ஒரு மாத காலத்திற்குத் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உள்ளதா என நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு நேற்று(17) உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறான விசாரணையின் போது யாழ்ப்பாண மாவட்டத்தின் காற்றில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் பொறிமுறையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் சுற்றாடல் அமைச்சர் மற்றும் ஏனைய குழுவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதேவேளை, கொழும்பு, கண்டி, காலி மற்றும் வட மாகாணத்தில் காற்றின் தரம் மீண்டும் சாதகமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சமீபத்திய மோசமான வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

00000000000

Exit mobile version