இலங்கை

நிர்ணய விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியாது : முரண்படும் விற்பனையாளர்கள்

Published

on

நிர்ணய விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியாது : முரண்படும் விற்பனையாளர்கள்

அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியாது என அரிசி மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகரித்த விலைக்கே மொத்த விற்பனையாளர்கள் அரிசியைக் கொள்வனவு செய்வதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். “5 முதல் 10 ரூபாய்க்கு இடைப்பட்ட இலாபத்தில் அரிசியை எவ்வாறு விற்பனை செய்வது.

அதேநேரம், நாடு அரிசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தநிலை தொடருமாயின் அரிசி வர்த்தகத்தைக் கைவிட நேரிடும்” என அரிசி மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இன்று முதல் நெல் ஆலை உரிமையாளர்களினால் நாளாந்தம் உற்பத்தி செய்யப்படும் அரிசி பொதி, தொகை மற்றும் சந்தைக்கு விநியோகிக்கப்படும் அளவு தொடர்பிலான அறிக்கையைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளால் பெற்றுக் கொள்ளப்படும் அறிக்கை வர்த்தக அமைச்சருக்கு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி அடுத்த வாரம் கிடைக்கும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது உருவாகியுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அதிகபட்சமாக 70,000 மெட்ரிக் டன்களுக்கு உட்பட்டு அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அண்மையில் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் அரிசியில் பெரும்பாலானவை இந்தியாவில் இருந்து கொண்டுவரப்படவுள்ளதுடன், இதற்கமைய அரிசி இருப்புகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் அடுத்த வாரத்தில் நாட்டை வந்தடையும் என கூறப்படுகிறது.

Exit mobile version