இலங்கை

தீவு ஒன்றில் சிக்கியிருந்த இலங்கைத் தமிழர்கள்! நீண்ட மோதலுக்கு பின் கிடைத்த விடுதலை

Published

on

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள பிரித்தானிய – அமெரிக்க இராணுவத் தீவான டியாகோ கார்சியாவில்(Diego Garcia) கடந்த 03 ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியிருந்த புலம்பெயர்ந்த இலங்கைர்கள் குழுவொன்று பிரித்தானியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

16 குழந்தைகள் உட்பட 60 பேர் அடங்கிய இலங்கைத் தமிழர்கள் குழுவொன்றே இவ்வாறு பிரித்தானியா அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த குழுவினர் டியாகோ கார்சியா தீவில் அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் மோசமான நிலையில் வசித்து வந்துள்ளனர்.

இவ்வாறு, பிரித்தானியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள், அந்நாட்டில் 6 மாதக்காலம் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த ஆறு மாதங்களுக்கு தேவையான நிதி வசதியையும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு வழங்க தீர்மானித்துள்ளது.

இவர்கள் தீவில் இருந்த காலப்பகுதியில், பல உண்ணாவிரதங்கள் மற்றும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் அதில் சிலர் சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், முகாமுக்குள் உடல் ரீதியான வன்கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டுகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பிரித்தானியாவின் இந்த தீர்மானம், நீதிக்கான நீண்ட மோதலிற்கு கிடைத்த வரவேற்க தக்க நடவடிக்கை என தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version