இலங்கை

விரைவில் கவிழும் அநுர அரசாங்கம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Published

on

தேசிய மக்கள் சக்தி அமைச்சர்களின் அனுபவமின்மையால் தற்போதைய அரசாங்கம் கோட்டாபயவின் அரசாங்கத்தை விடவும் விரைவில் கவிழும் அபாயம் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் எரிபொருள் விலை சூத்திரத்திலேயே தொங்கிக்கொண்டிருப்பதாகவும் எரிபொருள் விலை சூத்திரத்தை மாற்றுவதற்கு கூட அரசாங்கத்திற்கு போதிய அறிவு இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில், “நாட்டில் ஒரு நாளைக்கு சுமார் 3500 மெட்ரிக் டன் பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது. சுமார் 300 மெட்ரிக் டன் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

பெட்ரோல் விலையை 2 ரூபாய் குறைப்பதற்கு பதிலாக மண்ணெண்ணெய் விலையை 20 ரூபாய் குறைத்திருக்கலாம், இதன் மூலம் விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் மிகுந்த நிவாரணம் பெறுகின்றனர்.

பெட்ரோல் விலையை 2 ரூபாய் குறைப்பதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. முன்னாள் அமைச்சர்களின் சட்டைப்பைக்குள் எரிபொருள் விற்பனையில் இருந்து பெரும் கமிஷன்கள் சென்றதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குற்றஞ்சாட்டியது.

ஆனால் இப்போது அந்த கமிஷன் தொகையை கூட தேசிய மக்கள் சக்தி அரசால் குறைக்க முடியவில்லை. இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு அளித்த பொய்யான வாக்குறுதிகள் தற்போது ஒவ்வொன்றாக நிரூபிக்கப்பட்டு வருகின்றன.” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version