இலங்கை
வடக்கில் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
வடக்கில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பிராந்தியங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய மழையுடனான காலநிலையினால் வடக்கின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மை நாட்களாக இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் பெருமளவானோர் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தனர்.
அத்துடன், அவர்கள் வெள்ள நீரில் பயணம் செய்திருந்தனர்.
வெள்ள நீரில் எலியின் சிறுநீர் கலந்து பக்ரீறியா தொற்று ஏற்பட்டு குறித்த நோய் ஏற்படுகிறது.
இந்நிலையில், கடுமையான காய்ச்சல் மற்றும் கால் நோ, கண்சிவப்பு போன்ற அறிகுறி காணப்பட்டால் மருத்துவ உதவியைப்பெற்று எலிக்காய்ச்சலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.” என அவர் தெரிவித்துள்ளார்.