இலங்கை

வடக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்

Published

on

வடக்கு மாகாணத்தில் நிலவிவரும் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வவுனியா (Vavuniya) மாவட்டத்தில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக 1823 குடும்பங்களை சேர்ந்த 6301 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், 69 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (27.11) மாலை வரை இடம்பெற்ற பாதிப்புகளை அடிப்படையாக கொண்டே பாதிக்கப்பட்டோரின் தகவல்களை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய தொடர்ந்து பெய்து வரும் மழையினால், வெள்ள நீர் வழிந்தோடாமையால் பாதிப்புக்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக 775 குடும்பங்களைச் சேர்ந்த 2709 பேர் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதுடன், 11 தற்காலிக பாதுகாப்பு நிலையங்களில் 126 குடும்பங்களைச் சேர்ந்த 363 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு சமைத்த உணவுகள் பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் 11 குளங்களும் உடைப்பெடுத்துள்ளதுடன், ஏ9 வீதி உட்பட சில வீதிப் போக்குவரத்துக்களும் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version