இலங்கை

சீரற்ற காலநிலையால் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் பாதிப்பு: மக்களுக்கு விடுக்கப்படும் அறிவுறுத்தல்கள்

Published

on

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் பாரியளவிலும் பகுதியளவிலும் சேதங்கள் பதிவாகியுள்ளன.

அந்தவகையில், வவுனியா – நொச்சிமோட்டைப் பகுதியில் வெள்ள நீர் வீதியை மேவி பாய்வதால் ஏ9 ஊடான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

பரங்கி ஆறு ஆற்றுப்படுகை மாமடுக்குளத்தில் ஆரம்பித்து, நொச்சிமோட்டை பாலம் வழியாக பேராற்று பாய்ந்து செல்வதால் குறித்த வீதியில் வெள்ளம் மேவி பாய்ந்து வருகின்றது. குறித்த பகுதியில் சிறிய ரக வாகனங்கள் பல பயணிக்க முடியாத நிலையில் இரவில் இருந்து நீண்ட வரிசையில் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

இதன்காரணமாக கனகரக வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏ9 வீதியூடாக யாழிற்குப் பயணிக்கும் வாகனங்கள் ஹெப்பத்திகொல்லாவ, வெலியோயா, முல்லைத்தீவு, பரந்தன் வழி அல்லது மதவாச்சி, செட்டிகுளம், மன்னார் வழி மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

நேற்று வரை இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால் இன்று அதிகாலை மேலும் ஒரு வான்கதவு திறக்கப்பட்டது. இதனால் சென்கிளயர் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்து ரம்மியமாக காட்சியளிக்கின்றது.

அத்துடன், மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Exit mobile version