இலங்கை
அநுர அரசை விடாது துரத்தும் ரணில்: சவாலுடன் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அநுர அரசை விடாது துரத்தும் ரணில்: சவாலுடன் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தாம் அறிமுகப்படுத்திய பாதையில் செல்லாவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தை கையாள முடியாது என அநுர அரசாங்கத்தை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எச்சரித்துள்ளார்.
கொழும்பு (Colombo) மருதானையில் நேற்று (11) இடம்பெற்ற இறுதி மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது, “இந்த நாட்டில் உள்ள அனைத்து வரிசைகளையும் நாங்கள் நிறுத்தினோம். சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து கடன்களையும் நிர்வகித்தோம்.
2028க்குள் கடனை அடைக்கத் தொடங்க வேண்டும். 2042 வரை அவகாசம் உள்ளது. கடனை கட்டவில்லையென்றால் மீண்டும் வரிசை உருவாகும் காலத்துக்கு செல்ல வேண்டும்.
பொருளாதார தொலைநோக்கு பார்வையை ஜனாதிபதி இதுவரை சொல்லவில்லை. பெரும் நிச்சயமற்ற நிலை உள்ளது.
இப்போது அரிசி கிடைக்கவில்லை. தென்னை மரத்தை விட தேங்காய் விலை உயர்ந்துள்ளது, பொருட்களின் விலை தாமரை கோபுரம் போல் உயர்ந்து வருகிறது. முட்டை விலை அதிகரித்து வருகிறது.இவற்றை அரசால் தீர்க்க முடியுமா?
இந்த அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்துகிறது? பணக்கார நாடு, அழகான வாழ்க்கை என்ற விஞ்ஞாபனம் ஜனாதிபதித் தேர்தலில் கொண்டு வரப்பட்டது. அவற்றை இப்போது செயல்படுத்த முடியுமா?
கொழும்பு மற்றும் வாஷிங்டனில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசப்பட்டது. இப்போது மூன்றாவது தவணை எடுப்பது பற்றி ஆலோசிக்கிறீர்களா?
ஜனாதிபதி தேர்தலின் போது வரிச்சலுகை வழங்குவதாக திசைக்காட்டி கூறியது. அவை கிடைக்குமா? இல்லையா? அறிக்கை வெளியிடுங்கள்” என்றார்.